Thalapthy 68 - தளபதி 68ல் ஜெய் இருக்கிறாரா?.. அவரே அளித்த பதில்
சென்னை: thalapathy 68 (தளபடி 68) விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் இருக்கிறேனா என்பது குறித்து நடிகர் ஜெய் விளக்கமளித்துள்ளார்
லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடித்துவரும் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விரைவில் ஷூட்டிங் முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன. படமானது அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணி: லியோ படத்துக்கு பிறகு தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் விஜய் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த யூகங்கள் எல்லாம் வெங்கட் பிரபு இயக்குகிறார் என்ற அறிவிப்பால் சுக்கு நூறாகின. படத்தை அவர் இயக்க புதிய கீதை படத்துக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படம் அந்நிறுவனத்துக்கு 25ஆவது படமாக அமைகிறது.
எப்படி இருக்கும் படம்: அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்தாரோ அதேபோல் இந்தப் படத்தின் மூலம் விஜய்க்கு வெங்கட் பிரபு மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என தளபதி ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல் வெங்கட் பிரபுவும் கதையை கனகச்சிதமாக தயார் செய்வார் என ரொம்பவே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஸ்க்ரீன் ப்ளேவும் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.
வெங்கட் பிரபு கேங் இருக்கிறதா?: பொதுவாக வெங்கட் பிரபுவின் படம் என்றாலே அவரது கேங் என கருதப்படும் ஜெய், பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டோர் ஏதேனும் ஒரு காட்சியிலாவது இடம்பெற்றுவிடுவர். எனவே தளபதி 68 படத்திலும் ஜெய் இருப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பேசுகையில், "தளபதி 68ல் இருக்கிறேனா என்பது குறித்து நானே என்னிடம் கேட்டுக்கொண்டேன்.

சீக்ரெட்டாக வைத்திருந்தார்: அந்த அறிவிப்பு வரும் வரையிலுமே இந்த விஷயங்களை வெங்கட் பிரபு அண்ணா ரகசியமாகத்தான் வைத்திருந்தார். நானும் விஜய் அண்ணாவுடன் ரொம்ப நாள் கழித்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதேபோல்வெங்கட் பிரபு அண்ணாவின் படமும் நடித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. பார்ட்டிக்கு பிறகு நாங்கள் எந்தப் படமும் பண்ணவில்லை. எனவே ஒருவேளை தளபதி 68 மூலம் அது அமைகிறதா என்று பார்ப்போம்.
இப்போது சொல்ல முடியாது: ஒருவேளை நான் அதில் இருந்தால்கூட இப்போது என்னால் சொல்ல முடியாது. கண்டிப்பாக தளபதிக்கு ஏற்ற மாதிரி ஒரு மாஸ் படமாக இருக்கும். இப்போது மாநாடு பார்த்தோம் அல்லவா.. அது ஒரு மாஸ் படம் ஆனால் திரைக்கதை புதிதாக இருந்தது. எனவே அது மாதிரி இதில் ஏதாவது வெங்கட் பிரபு புதிதாக செய்வார்" என்ரார். விஜய் நடித்த பகவதி படத்தின் மூலமாகத்தான் ஜெய் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











