திடீர் உடல் நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி!
பெங்களூரு: போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ராகிணி திவேதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் அதை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஞ்சனா கல்ராணி
இந்த வழக்கில் கன்னட நடிகை ராகிணி திவேதி செப்டம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை அடுத்து, நடிகை சஞ்சனா கல்ராணி செப்டம்பர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர்கள் நண்பர்கள் உட்பட 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவக் காரணம்
இந்நிலையில், நடிகைகள் 2 பேரும் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இரண்டு பேரின் ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவக் காரணங்களுக்காக, நடிகை சஞ்சனாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

மன உளைச்சல்
இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த வழக்கில் நடிகை சஞ்சனாவுக்கு முன்பே நடிகை ராகிணி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் தனக்கு ஜாமீன் கிடைக்காததால், ராகிணி மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

முதுகு வலி
இந் நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை ராகிணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் மற்றும் முதுகு வலியால் அவர் சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.

மீண்டும் சிறைக்கு
இருந்தும் உடல் நலம் சரியாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயநகரில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் நடிகை ராகிணி நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் நேற்று மாலை அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











