Blue Sattai Maran: “பருந்து மக்களிடம் ஒன்றி வாழாது”... ரஜினிக்கு அண்டங்காக்கை கதை சொன்ன ப்ளூ சட்டை!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
ரஜினி உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியை ரசிகர்களும் நேரில் பார்த்து ரசித்தனர்.
அப்போது மேடையில் பேசிய ரஜினி, காகம் - பருந்து கதை கூறி சிறப்பான கன்டெண்ட் கொடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன், ரஜினிக்கு அண்டங்காக்கை கதை சொல்லி ட்ரோல் செய்துள்ளார்.

ரஜினிக்கு அண்டங்காக்கை கதை சொன்ன ப்ளூ சட்டை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகவுள்ள இப்படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் நேற்று முதல் தொடங்கியது. அதன்படி நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து மிக வெளிப்படையாக தனது கருத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், குட்டி ஸ்டோரி ஒன்றையும் கூறி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, "காகம் ஒரு இடத்தில் இருக்காது, அங்கும் இங்கும் பறந்துகொண்டே இருக்கும். ஆனால், பருந்து அப்படியில்லை, ரொம்பவே அமைதியானது. காகம் உயர பறந்துகொண்டிருக்கும் பருந்தை கொத்தினாலும், பருந்து காகத்தை ஒன்றும் செய்யாது. அதேபோல், காகம் பருந்து உயரம் பறக்க ஆசைப்படும், ஆனால், அது முடியாமல் கீழே விழுந்துவிடும்" என்றார். மேலும், "இந்த கதையை வைத்துக்கொண்டு ரஜினி யாரை காகம் எனக் கூறினார் என சமூக வலைத்தளங்களில் எழுதுவார்கள்" என பேசினார்.
சூப்பர் ஸ்டார் டைட்டிலை மனதில் வைத்துள்ள ரஜினி, நடிகர் விஜய்யை தாக்கி தான் காகம் - பருந்து கதையை சொன்னதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் ரஜினிக்கு ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி அதகளம் செய்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர் "பருந்து மக்களிடம் ஒன்றி வாழாது. உயரத்தில் தனியே திரியும். காகம் மனிதர்களுடன் வாழும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "பருந்து சிறப்பு விருந்தை உண்ணும். காகம் எளியோர் படைக்கும் உணவை உண்ணும். சிறு உணவெனினும் அதை காகம் பகிர்ந்துண்டு உண்ணும். ஒரு காகம் இறந்தால் மற்றவை ஒன்று கூடும். பருந்து தனது வேட்டையை தனித்தே ருசிக்கும். பிற பருந்தின் சோகத்தில் காகத்திற்கு ஈடாக பங்கேற்காமல் சுயநலத்துடன் தனியே வானில் திரியும். உயரே பறப்பது மட்டுமே உயர்குணம் ஆகாது. கருமை நிறத்தில் இருப்பதால் பருந்தை விட காகம் தாழ்ந்தும் போகாது. நீயும் கருப்புதான் என்பதை நினைவில் கொள்.. காமடி பருந்தே!!" என பதிவிட்டுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல், "இதை சொன்னாலும் பருந்தின் மண்டையில் ஏறாது. ஏறினாலும் ஏறாதது போல் நடிக்கும். யாரை காகமென்று கூறினார் என்று சமூக வலைத்தளம் எழுதுமாம். ப்ளூ சட்டை என தைரியமாக மேடையில் கூற பருந்திற்கு திராணி இல்லை. ஆகவே அல்லக்கைகளை உசுப்பி விடுகிறது. இதற்கெல்லாம் காகம் அசரவே அசராது. பருந்தின் வண்டவாளங்கள் தொடர்ந்து தண்டவாளத்தில் ஏற்றப்படும். இப்படிக்கு, அண்டங்காக்கை" என ட்வீட் செய்துள்ளார்.
ரஜினியின் காகம் - பருந்து கதை விஜய்க்கு தான் என பலரும் நினைத்துக்கொண்டிருக்க, ப்ளூ சட்டை மாறனோ அது நான் தான் என வாண்ட்டடாக வந்து வண்டியில் ஏறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரஜினி ரசிகர்கள், "அவ்வளோ பெரிய அப்பாடக்கராடா நீ..? உன் லெவளுக்கு உன்னைய சினிமா துறையில இருக்குற யார் கூடவும் பொருத்தி பேச தகுதி இல்லை" என்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் ப்ளூ சட்டை மாறனுக்கு சப்போர்ட்டாகவும் கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











