Jailer Box Office: 500 கோடியை கடந்த ஜெயிலர் வசூல்... பாக்ஸ் ஆபிஸ் ஒரிஜினல் ரிப்போர்ட் சொல்வது என்ன?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.
முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், ரஜினிக்கு சூப்பரான கம்பேக்காக அமைந்தது.

முதல் வாரம் முடிவில் 375 கோடி ரூபாய் வசூலித்த ஜெயிலர், இரண்டாவது வார இறுதியில் 500 கோடியை கடந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் இருந்து ஜெயிலர் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

500 கோடியை கடந்த ஜெயிலர் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வெளியானது. ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேபோல், முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால் முதல் மூன்று நாட்களிலேயே ஜெயிலர் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சினிமா ட்ராக்கர்கள் கூறி வந்தனர்.
ஆனால், முதல் வாரம் முடிவில் தான் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதல் வாரம் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. சினிமா ட்ராக்கர்களின் அப்டேட்டுக்கும் சன் பிக்சர்ஸின் அறிவிப்புக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இதனால், ஓரிரு தினங்களுக்கு ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் குறித்த மோதல்கள் சமூக வலைத்தளங்களில் இல்லாமல் இருந்தன.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஜெயிலர் வசூல் குறித்து பிரபல சினிமா ட்ராக்கர்கள் அப்டேட் கொடுத்துள்ளனர். அதன் படி ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 500 முதல் 550 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறியுள்ளனர். 2.O படத்திற்குப் பின்னர் ரஜினியின் ஜெயிலர் தான் இரண்டே வாரத்தில் 500 கோடியை கடந்துள்ளதாக ரமேஷ் பாலா ட்வீட் செய்துள்ளார். ஆனாலும் இதற்கான சோர்ஸ்கள் குறித்து அவர் குறிப்பிடவில்லை.
கேஜிஎஃப், ராஜமெளலியின் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்களுக்குப் பிறகு உலகம் முழுவதும் அதிவிரைவாக 500 கோடி வசூலித்த படம் ஜெயிலர் தான் என, சினிமா விமர்சகர் ராஜசேகர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ்நாட்டில் இதுவரை பொன்னியின் செல்வன் நம்பர் 1 இடத்தில் இருப்பதாகவும், அதனையடுத்து கமலின் விக்ரம் திரைப்படம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வரிசையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் இணைந்துள்ளதாகவும் ராஜசேகர் ட்வீட் செய்துள்ளார்.

ஆனாலும் இந்த அப்டேட் குறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே சினிமா ட்ராக்கர்கள் சொன்ன வசூலை விடவும் சன் பிக்சர் அறிவித்த ரிப்போர்ட் குறைவாக இருந்தது. இந்த முறையும் அதேபோல் இவர்கள் கம்பு சுற்றி வருவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், முதல் வாரத்தை விடவும் இப்போது ஜெயிலருக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இல்லை எனவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதனால், ஜெயிலர் 500 கோடி ரூபாய் வசூலிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விரைவில் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அபிஸியல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











