Jailer Box Office: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் திணறும் ஜெயிலர்... 9வது நாள் கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ!!
சென்னை: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்திற்கு முதல் வாரம் நல்ல ஓபனிங் கிடைத்தது.
கடந்த வாரம் 10ம் தேதி வெளியான இந்தப் படம் இதுவரை 400 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்துக்கு முதல் வாரம் இருந்த வரவேற்பு இரண்டாவது வாரம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது.
அதன்படி, 9வது நாளான நேற்று ஜெயிலர் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.

ஜெயிலர் 9வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ஆடுகளம் கிஷோர், தமன்னா, சுனில் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களுக்குப் பிறகு மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக ஜெயிலர் உருவானது.
இதனால், படம் வெளியாகும் முன்பே ரஜினி ரசிகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஜெயிலரை அதிகம் எதிர்பார்த்து இருந்தனர். அதன்படி கடந்த வாரம் 10ம் தேதி வெளியான ஜெயிலர் படத்துக்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. அனைத்து ஏரியாக்களிலும் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மாஸ் காட்டியது.
ஜெயிலர் வசூல் குறித்து தினமும் அப்டேட் கொடுத்த சோஷியல் மீடியா ட்ராக்கர்கள், முதல் நாளிலேயே 100 கோடியை தொட்டுவிட்டதாக கூறினர். மேலும், முதல் நான்கு நாட்களில் 300 கோடி வசூலை கடந்துவிட்டதாக அப்டேட் கொடுத்தனர். ஆனால், ஜெயிலர் முதல் வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அபிஸியலாக அறிவித்தது. அதன்பின்னர் சோஷியல் ட்ராக்கர்கள் தரப்பில் இருந்து ஜெயிலர் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், 15ம் தேதி விடுமுறைக்குப் பிறகு ஜெயிலர் வசூல் குறைந்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 8வது நாளில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாம் ஜெயிலர். அதேபோல், 9வது நாளான நேற்றும் 25 முதல் 30 கோடி ரூபாய் வரை மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாம். அதன்படி ஆகமொத்தம் இதுவரை 430 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் 170 கோடி ரூபாய் வரையும், தமிழ்நாடு உட்பட இந்திய முழுவதும் 230 முதல் 250 கோடி வரையும் கலெக்ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவுக்குப் பிறகு அமெரிக்காவில் தான் அதிகம் வசூல் எனக் கூறப்படுகிறது. அதன்படி, இதுவரை 5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளதாம். விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் முதல் வாரம் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











