Jailer Box Office: கை கொடுத்ததா ரஜினியின் மாஸ்..? ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ஒரிஜினல் ரிப்போர்ட் இதோ!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான ஜெயிலர் கடந்த 10ம் தேதி ரிலீஸானது.
நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

ஜெயிலர் படத்துக்கு முதல் வாரம் நல்ல ஓபனிங் கிடைத்த நிலையில், மொத்தம் 375 கோடி ரூபாய் வசூலித்தது.
ஆனால், இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.
ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் கடந்த 10ம் தேதி வெளியானது. அண்ணாத்த படத்தின் தோல்வியில் இருந்து கம்பேக் கொடுக்க வேண்டும் என காத்திருந்தார் சூப்பர் ஸ்டார். இதே நினைப்போடு தலைவரின் ரசிகர்களும் ஜெயிலர் படத்தை எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ஜெயிலருக்கு முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேபோல் சிங்கிளாக களமிறங்கிய ஜெயிலருக்கு முதல் வார பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால், முதல் நாளில் 60 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்பட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் ஜெயிலர் படத்தின் வசூல் குறையவே இல்லை. இதனால் முதல் வாரத்தில் 375 கோடி ரூபாய் வரை வசூலித்தததாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. முன்னதாக சோஷியல் மீடியா ட்ரக்கர்கள் முதல் வாரம் வசூல் 500 கோடி ரூபாய் என உருட்டி வந்தனர்.
ஆனால், தற்போது வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தான் ஜெயிலர் வசூல் 500 கோடியை கடந்துள்ளது. அதன்படி இரண்டு வாரங்களின் முடிவில் ஜெயிலர் படம் மொத்தமாக 525 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதன்மூலம் முதல் வாரம் ஜெயிலர் படத்துக்கு இருந்த வரவேற்பு, இரண்டாவது வாரத்தில் சுத்தமாக குறைந்துவிட்டது தெரியவந்துள்ளது. அதாவது முதல் வாரம் 375 கோடி ரூபாய் வசூலித்த ஜெயிலர், இரண்டாவது வாரம் மொத்தமே 150 கோடி தான் கலெக்ஷன் செய்துள்ளது.
ஜெயிலருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும், இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். ஆனால், உபி சென்றிருந்த ரஜினி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி வாங்கியது கடும் சர்ச்சையானது. இதனால், இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் காத்து வாங்கின. அட்வான்ஸ் புக்கிங், நேரடியாக வரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் ரொம்பவே குறைந்தது.
ஜெயிலர் வெளியாகும் முன்பே ரஜினி யோகி ஆதித்யநாத் காலில் விழுந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாகிருக்கக் கூடும் என விமர்சனங்களும் எழுந்தன. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரஜினியின் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்திருந்தாலும், ஜெயிலர் படத்துக்கு இருந்த எதிர்பார்ப்பிலும் வரவேற்பிலும் இது குறைவு என்றே சொல்லப்படுகிறது. அதேபோல், விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் மொத்த வசூலை பிரேக் செய்வதிலும் ஜெயிலர் ஃபெயில் ஆகிவிட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக ரஜினியின் மாஸ் காலியாகிவிட்டது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











