தீபாவளி ரேஸில் ரஜினி - தனுஷ்... களத்தில் குதிக்க ரெடியான கார்த்தி... பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக தெரிகிறது.
அதன்படி ஜெயிலர் படத்தை சுதந்திரன தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் அல்லது தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறதாம்.
அதேநேரம், தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான் படங்களும் தீபாவளி தினத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கடந்த வாரம் கொச்சியில் நடைபெற்ற ஜெயிலர் படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டு சென்னை திரும்பினார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ரிலீஸ் தேதியில் தாமதம்
ஆனால், சொன்னபடி ஷூட்டிங் முடியாததால் ஜெயிலர் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சொல்லப்படுகிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஷெட்யூல் ஷூட்டிங் முடிக்க வேண்டியது உள்ளதாம். அதன்பின்னர் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் இருப்பதால் ஜெயிலர் திரைப்படம் சுதந்திர தின ஸ்பெஷலாக ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அப்போதும் முடியாவிட்டால் தீபாவளி ரேஸில் களமிறக்க நெல்சன் முடிவுசெய்துள்ளாராம்.

தனுஷின் கேப்டன் மில்லர்
ஜெயிலர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது இன்னும் உறுதியாகவில்லை, ஆனால், ஜெயிலருக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லரும் தீபாவளிப் போட்டியில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. தனுஷுடன் சிவராஜ்குமார், சந்திப் கிஷன் ப்ரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். பீரியட் ஜானரில் ஆக்ஷன் படமாக உருவாகும் கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காத்திருக்கும் கார்த்தியின் ஜப்பான்
இதனிடையே தீபாவளி வெளியீட்டை மனதில் வைத்து தான் கார்த்தியின் ஜப்பான் திரைப்படமும் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. ராஜூ முருகன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்த கார்த்தி, இந்தாண்டும் மாஸ் காட்ட முடிவு செய்துவிட்டாராம். ஏற்கனவே பொன்னியின் செல்வன் 2 ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில், ஜப்பான் படத்தை தீபாவளிக்கு களமிறக்க கார்த்தி முடிவு செய்துள்ளாராம்.

ரஜினி - தனுஷ் - கார்த்தி
பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியானது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்த இரண்டுப் படங்களுமே 300 கோடிக்கும் மேல் வசூலித்தன. இந்நிலையில், தீபாவளி போட்டியில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான் ஆகிய படங்கள் வெளியாகலாம் என்ற தகவல், செம்ம வைரலாகி வருகிறது. இன்னொரு பக்கம் கமலின் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக ரஜினி - தனுஷ் இருவரும் தீபாவளி பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











