தயாரிப்பாளரான நெல்சன் திலீப்குமார்.. நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஃபிலமென்ட் பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். மேலும் முதல் படம் குறித்த அறிவிப்பு மே 3ந் தேதி வெளியாகும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பலர் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில், பல முன்னணி இயக்குநர்களிடம் கால் வலிக்க காத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போய் தன்னம்பிக்கை, விடாமுயற்சியையும் தனக்கானதாக பயன்படுத்திக் கொண்டு பல இயக்குநர்கள் வெற்றிபெற்று இருக்கிறார்கள். இப்போது வரும் இளம் இயக்குநர்கள் அனைவரும் வாய்ப்பை தேடாதே உருவாக்கு என்பதை மனதில் வைத்துக்கொண்டு குறும்படத்தை எடுத்து இன்று டாப் இயக்குநராக உருவாகி இருக்கிறார்கள்.

கனாகாணும் காலங்கள்: அப்படி தன்னம்பிக்கையால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குநராகி இருக்கிறார் நெல்சன் திலீப்குமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனாகாணும் காலங்கள் என்ற சீரியலை இயக்கினார். சின்னத்திரையில் மாஸ் காட்டிவந்த நெல்சன் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானியை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். ஆனால், இந்த படத்திற்கு எழுந்த பல பிரச்சனைகளால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. நெல்சனின் திரைப்பயணம் பாதியில் முடிந்துவிடுமோ என்று பேச ஆரம்பிப்பதற்குள் கோலமாவு கோகிலா என்ற பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார்.
டாக்டர்: இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை கொடுத்தார். இந்த படமும் கோலமாவு கோகிலா திரைப்படம் போல நகைச்சுவைக்கு குறைவே இல்லாமல் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. கொரோனா ஊரடங்கு பின் வெளியான இந்த படம் வசூலை அள்ளியது. இந்த படத்திற்குபின் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் எழுந்தாலும், படம் கணிசமான வசூலை பெற்றது.
ஜெயிலர்: பீஸ்ட் படத்தின் மோசமான விமர்சனத்தால் துவண்டு போகாமல், நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கினார். தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் அதிரடியான வெற்றிப்படமாக அமைந்து ரூ650 கோடி வசூலை அள்ளியது. ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவராக மாறினார் நெல்சன்.
தயாரிப்பு நிறுவனம்: இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் என்னுடைய 20வயதில் இருக்கும்போது, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறைக்கு வந்தேன். இத்தனை வருடங்களில், எண்ணற்ற ஏற்ற இறக்கத்தின்போது, எனது துறையில் வளர்வதற்காக மட்டுமே பணி செய்து இருக்கிறேன். இதற்கிடையே எப்போதுமே எனக்கு ஒரு சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. இன்று எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தில் மெய்சிலிர்ப்புடன் இருக்கிறேன். எனது நிறுவனத்தின் பெயர், ஃபிலமென்ட் பிக்சர்ஸ் ஆகும்
அடுத்த அப்டேட்: எங்களது ஃபிலமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின்மூலம், எங்களது முதன்மையான நோக்கம் என்பது புதுவிதமான மற்றும் அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான படங்களை உருவாக்கி, பெரிய அளவிலான ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம். எங்களுடைய முழுமையான பார்வையைக் கொண்ட சினிமாக்களை இதன்மூலம் தயாரிக்க இருக்கிறோம். அது நிச்சயம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். எங்களது முதல் படம் பற்றிய அறிவிப்பு வரக்கூடிய மே 3ஆம் தேதி இருக்கும். அதுவரை காத்திருங்கள். உங்களது ஆதரவுக்கு நன்றி என நெல்சன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications