Jailer: பிரபலங்களையும் விட்டுவைக்காத ஜெயிலர் ஃபீவர்... குடும்பத்துடன் பார்த்து ரசித்த கேரள முதல்வர்!
திருவனந்தபுரம்: ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள ஜெயிலர் படத்தை பல்வேறு பிரபலங்களும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஜெயிலர் படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்துள்ளார்.

குடும்பத்துடன் ஜெயிலர் படத்தை பார்த்த பினராயி விஜயன்: தமிழ்த் திரையுலகின் நிரந்தரமான சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினி. அவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு இப்போது வரையும் மாஸ் குறையவே இல்லை. அதன்படி தற்போது வெளியான ஜெயிலர் படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், விநாயகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியான ஜெயிலர், முதல் நாளில் இருந்தே வசூலில் சக்கைப்போடு போட்டுள்ளது. பொதுவாக ரஜினியின் படங்களை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் தனுஷ், இயக்குநர்கள் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் பார்த்து ரசித்தனர். திரை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் ரஜினியின் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் நாளே ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் நெல்சனை பாராட்டியிருந்தார்.
ஸ்டாலினைத் தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் ஜெயிலர் படத்தை தனது குடும்பத்தினருடன் பார்த்து ரசித்துள்ளார். ஜெயிலர் படம் பார்க்க திரையரங்கிற்குச் சென்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் ரசிகர்கள், ஜெயிலர் ஃபீவர் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லையே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடித்துள்ளதால், கேரள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் முதல் மூன்று நாட்களில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ரஜினியின் கேரியரில் கேரளாவில் அதிகம் ஓபனிங் கிடைத்த படம் ஜெயிலர் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











