Jailer Release - ஜெயிலர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதா?.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: Jailer Release (ஜெயிலர் ரிலீஸ்) ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவிருக்கிறது என கூறப்பட்ட சூழலில் இப்போது அப்படத்தில் ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான காரணம் குறித்தும் ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்தாராம் ரஜினிகாந்த். இதனையடுத்துதான் இளம் இயக்குநருடன் இணையலாம் என முடிவு செய்து நெல்சனுடன் கை கோர்த்தார்.

நிரூபிப்பாரா நெல்சன் திலீப்குமார்: கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் இயக்கினார். முதல் இரண்டு படங்கள் போலவே அந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்த்திருந்த நெல்சனுக்கு பலத்த அடி விழுந்தது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் அவரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். எனவே விஜய்யிடம் விட்டதை ரஜினியை வைத்து பிடித்து மீண்டும் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.
ரஜினி கொடுத்த ஐடியா?: பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் நெல்சன் மீது நம்பிக்கை இழந்துவிட்டார் எனவும், ஒருகட்டத்தில் அவரை படத்திலிருந்து தூக்குவதற்கு தயாராகிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒருவழியாக ஜெயிலர் படத்துக்கு நெல்சனே இயக்குநராக இறுதி செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக்குவதும், அதற்காக பல மொழிகளில் இருந்தும் ஸ்டார்களை களம் இறக்குவதும் என ரஜினிகாந்த் ஐடியா கொடுத்தாராம். அதன்படிதான், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஜினி போர்ஷன் ஓவர்: படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்துவந்த சூழலில் ரஜினிக்கான போர்ஷன் முடிவடைந்துவிட்டதாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் ஒரு விழாவில் அறிவித்திருந்தார். ஆனால் படத்தில் நடிக்கும் மற்றவர்களுக்கான ஷூட்டிங் இன்னும் பத்து நாள்கள் பாக்கியிருப்பதாகவும், அதனையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

எப்போது ரிலீஸ்: இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதாம்.
விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி வரவிருக்கிறது. எனவே படத்தை செப்டம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்தால் நான்கு நாள்கள் விடுமுறையை பயன்படுத்தி வசூலை அள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் இந்தத் திட்டத்தை படக்குழு கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











