Jailer - சூடுபிடிக்கும் ஜெயிலரின் அடுத்தடுத்த பணிகள் - லேட்டஸ்ட் தகவல் இதோ
சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தின் டப்பிங் பணிகள் எப்போது தொடங்கும் என்ற லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தர்பார், அண்ணாத்த படங்களின் படுதோல்விக்கு பிறகு ரஜினியின் சம்பள கிராஃப் கொஞ்சம் குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக இரண்டு தோல்வி படங்களை கொடுத்த ஹீரோ என்ற பெயரையும் எடுத்துவிட்டார். இதன் காரணமாக அடுத்த படத்தை கட்டாயமாக ஹிட்டாக்க வேண்டும் என்ற முனைப்பில் பல இயக்குநர்களிடம் கதை கேட்டதாக கூறப்பட்டது. அந்த லிஸ்ட்டில் நெல்சன் திலீப்குமாரை ரஜினிகாந்த் டிக் செய்தார்.

பீஸ்ட்டுக்கு பின் ஜெயிலர்: நெல்சன் திலீப்குமார் தனது முதல் இரண்டு படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை வெற்றி படமாக கொடுத்தாலும் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இருப்பினும் நெல்சன் மீது நம்பிக்கை இழக்காத ரஜினிகாந்த் ஜெயிலர் படத்துக்கு நெல்சனையே இயக்குநராக இறுதி செய்தார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்: பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டை தெரிந்துகொண்ட பிறகும் தன்னை படத்தின் இயக்குநராக கமிட் செய்திருக்கும் ரஜினியின் நம்பிக்கையை காப்பாற்றுவதில் பெரும் உத்வேகத்துடன் காணப்படுகிறார் நெல்சன் திலீப்குமார். அதனால் கதை, திரைக்கதை, மேக்கிங் என ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பக்குவமாக செதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் களமிறங்கியுள்ளது.
மகிழ்ச்சியில் ரஜினிகாந்த்: ஜெயிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த அறிவிப்பை ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு தெரிவித்தது படக்குழு. அந்த க்ளிம்ப்ஸ் வீடியோவுக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை வழங்கியிருக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஜெயிலர் க்ளிம்ப்ஸுக்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் ரஜினிகாந்த்தை ரொம்பவே மகிழ்ச்சியடைய செய்துள்ளதாக படக்குழு வட்டாரம் தெரிவித்துவருகின்றது.
அடுத்தடுத்த பணிகள்: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதனையொட்டி படத்தின் டப்பிங் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்திருந்தது. அதற்கு இப்போது ஒரு தகவல் மூலம் பதில் கிடைத்திருக்கிறது. அதாவது, ரஜினிகாந்த் இப்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

அந்த ஷூட்டிங்கை முடித்துவிட்டு இந்த மாத இறுதியில் சென்னை திரும்பும் அவர் ஜூன் ஒன்றாம் தேதி ஜெயிலர் படத்தின் டப்பிங்கில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் முதல் சிங்கிளையும் விரைவில் வெளியிட படக்குழு தயார் நிலையில் இருப்பதாகவும் ஒரு தகவல் வட்டமடிக்கிறது.
கதை என்ன?: இதற்கிடையே ஜெயிலர் படத்தின் கதை குறித்த சுவாரஸ்ய தகவலும் வெளியானது. அதன்படி, முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாகவும், படம் ஒரே இரவு அல்லது ஒரே நாளில் நடப்பது போன்று நெல்சன் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











