Jailer Box Office: டைகர் கா ஹுகும்.. சுதந்திர தின வேட்டை.. 400 கோடி வசூலை கடந்த ஜெயிலர்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் 400 கோடி வசூலை கடந்துள்ளதாக அண்மைத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சுதந்திர தின விடுமுறை நாளான இன்று தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியளவில் ரசிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு முற்றுகையிட்டுள்ளனர்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்னன், வசந்த் ரவி, சுனில், யோகி பாபு, விநாயகன் என நட்சத்திர பட்டாளமே நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியானது.

இந்நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று இரவு நேர காட்சி வரை டிக்கெட்டுகள் புக்கான நிலையில், வெளியான வசூல் நிலவரத்தின்படி 400 கோடி வசூலை ஜெயிலர் கடந்துள்ளதாக கூறுகின்றனர்.
400 கோடி வசூலை கடந்த ஜெயிலர்: தர்பார், அண்ணாத்த படங்கள் எல்லாம் 200 கோடி வசூலுக்கு போராடி பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வியை தழுவிய நிலையில், எப்படியாவது மிகப்பெரிய வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்கிற முயற்சியில் ஜெயிலர் படத்தின் மீது முழு கவனத்தையும் ரஜினிகாந்த் செலுத்தினார்.
பீஸ்ட் படத்தின் ட்ரோல்களுக்கு பிறகு கம்பேக் கொடுக்க இயக்குநர் நெல்சனும் பவர் ஹவுஸ் பர்ஃபார்மர்களை ஜெயிலரில் இறக்கி ஆக்ஷனையும் மாஸ் காட்சிகளையும், காமெடி, குடும்பம், குத்துப் பாட்டு என அத்தனை கமர்ஷியல் ஃபார்முலாக்களையும் இறக்கியதன் விளைவாக இப்படியொரு வசூல் வேட்டையை ஜெயிலர் நிகழ்த்தி வருகிறது.
விக்ரம் வசூலை முறியடித்ததா?: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் மொத்த வசூல் 420 கோடி ரூபாயாக உள்ள நிலையில், அந்த படத்தின் வசூலை விரைவில் ஜெயிலர் முறியடித்து விடும் என்றும் ஒரு பக்கம் அந்த படத்தின் வசூலை இன்று இரவுக் காட்சியுடன் ஜெயிலர் படம் முறியடித்து விட்டது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுவரை சன் பிக்சர்ஸ் எந்தவொரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர்சீஸில் வீக் டேஸ் என்பதால், அங்கே சுதந்திர தின விடுமுறை எல்லாம் இல்லாத நிலையில், 400 கோடி வரை தான் ஜெயிலர் வசூல் ஈட்டியிருக்கும் என்றும் நாளை அல்லது நாளை மறுநாள் விக்ரம் படத்தின் வசூலை ஜெயிலர் பீட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
600 கோடி வரை செல்லும்: ஜெயிலர் படம் முதல் வார இறுதியை மட்டுமே நிறைவு செய்துள்ள நிலையில், இரண்டாவது வார இறுதியின் முடிவில் இன்னமும் பெரிய வசூல் வேட்டை நடக்கும் என்றும் அதிகபட்சமாக 500 கோடி முதல் 600 கோடி வரை தியேட்டர் வசூல் இருக்கும் என்றும் அதை தாண்டி ஜெயிலர் படத்தின் இசை உரிமம், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் என ஒட்டுமொத்தமாக 1000 கோடி வரை வியாபாரம் செய்யும் இந்த படம் என எதிர்பார்க்கப்படுகிறது. தியேட்டர் அதிபர்கள், சன் பிக்சர்ஸ், ஜெயிலர் படக்குழுவினர் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











