Jailer Trailer: “We are from CBI... டொனேஷன் வேணுமா..” ஜெயிலர் ட்ரெய்லரை அதிர வைத்த வசனம்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.
நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டது.
இதில் ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷனை பார்த்து ரசிகர்கள் செம்ம வைப்பில் உள்ளனர்.

இந்நிலையில், இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் இணையத்தையே அதிர வைத்துள்ளது.
ஜெயிலர் ட்ரெய்லரை அதிர வைத்த வசனம்
சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஜெயிலர் திரைப்படம். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 10ம் தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் காவாலா, ஹ்ம்க்கும் டைகர் கா ஹ்ம்க்கும், ஜுஜுபி என அடுத்தடுத்து வெளியான மூன்று பாடல்களும் தெறி மாஸ் காட்டின.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியது இப்போது வரையிலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேபோல், 'காகம் - பருந்து' என குட்டி ஸ்டோரியும் சொல்லி ட்வீஸ்ட் வைத்திருந்தார். சூப்பர் ஸ்டார் கனவில் மிதந்து வரும் சில இளம் ஹீரோக்களுக்கான எச்சரிக்கை என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.
இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் தற்போது வெளியான ஜெயிலர் ட்ரெய்லர் இன்னொரு புயலை கிளப்பியுள்ளது. ஆக்ஷன் காட்சியுடன் தொடங்கும் ஜெயிலர் ட்ரெய்லரில், முதல் வசனமே "We are from CBI" என ஒரு காட்சி வருகிறது. அதற்கு பதில் கொடுக்கும் விதமாக "டொனேஷன் எதாவது வேணுமா" என வில்லன் நடிகர் சுனில் ஒரு வசனம் பேசுகிறார். அதன்பிறகே டைட்டிலில் "கலாநிதி மாறன் வழங்கும்" என ட்ரெய்லர் வேகம் எடுக்கிறது.
சிபிஐ, அமலாக்கத்துறைக்கு எதிரான வலுவான இந்த வசனம் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரஜினி, சன் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவான ஜெயிலர் படத்தில் இப்படியொரு வசனமா என, அரசியல் ரீதியாகவும் கவனம் ஈர்த்துள்ளது. அதாவது கடந்த சில மாதங்களாகவே திமுகவைச் சேர்ந்த முக்கியமான பிரபலங்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது.
இதன் பின்னணி குறித்து பலவிதமான பேச்சுகள் அடிபட்டாலும், இதெல்லாம் மறைமுகமாக பணம் கேட்பதற்கான எச்சரிக்கை எனவும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலரில் அமலாக்கத்துறைக்கு எதிராக வசனம் இடம்பெற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. சிபிஐ-க்கு டொனேஷன் வேண்டுமா என கேட்பதெல்லாம் பக்கா சினிமாட்டிக் பஞ்ச் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை மத்திய அரசின் கீழ் இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இந்த வசனம் படத்தில் முழுமையாக எப்படி இருக்கும் எனத் தெரியாது எனவும், அப்போது தான் இந்தக் காட்சியின் பின்னணி குறித்து தெரியவரும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கமர்சியல் பேக்கேஜ்ஜாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இதில் பொலிட்டிக்கல் அட்டாக் இருக்குமோ எனவும் யோசிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











