Jailer Box Office: ஜெயிலர் நான்கு நாள் வசூல் 300 கோடியா..? பரபரக்கும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக ரிலீஸான ஜெயிலர், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர்கள் ஜெயிலர் திரைப்படம் 300 கோடி வசூலித்துள்ளதாக கணித்துள்ளனர்.

4 நாட்களில் 300 கோடி வசூலித்த ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் போன்ற மற்ற மொழி சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ளதே இப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.
மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், அவர்கள் என்ட்ரியாகும் சீன் செம்ம மாஸ்ஸாக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் படங்கள் சும்மாவே மற்ற மாநிலங்களிலும் மாஸ் காட்டும். ஜெயிலரில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்ததால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஆல் ஏரியாவிலும் ஜெயிலர் சம்பவம் செய்துள்ளது.
இதனால் தரமான ஓபனிங் கிடைத்த ஜெயிலர் முதல் நாளில் இந்தியா முழுவதும் 50 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாவது, மூன்றாவது நாட்களிலும் ஜெயிலர் வசூல் கொஞ்சமும் குறையவில்லை என தெரிகிறது. நேற்றைய தகவலின் படி ஜெயிலர் மூன்று நாள் வசூல் 220 கோடி ரூபாய் இருக்கும் என சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய காலை நிலவரப்படி ஜெயிலர் 4 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். எந்திரன், கபாலி, 2.O படங்களுக்குப் பிறகு 300 கோடி கிளப்பில் இணையும் ரஜினியின் படம் ஜெயிலர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் மட்டும் 90 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார்.

ஆனாலும், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. நாளை ஆகஸ்ட் 15 சுதந்திரதின விடுமுறை என்பதால், இன்னும் இருதினங்களுக்கு ஜெயிலர் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸ் கணிப்பின் படி முதல் வாரத்தில் 400 முதல் 500 கோடி வரை வசூலிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











