Vijay: தவெகவில் முதல் குண்டு.. புஸ்ஸி ஆனந்தை விளாசிய தாடி பாலாஜி.. விஜய் என்ன செய்யப்போகிறார்?
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் இன்று அதாவது மார்ச் 28ஆம் தேதி நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கட்சிக்குள் முதல் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார், நடிகரும் தவெகவைச் சேர்ந்தவருமான தாடி பாலாஜி. இவரது விமர்சனம் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது மட்டும் இல்லாமல், விஜய் மீதும் வைக்கப்பட்டுள்ளதால், தவெகவினர் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார். கட்சி தொடங்கிய முதல் ஆண்டில் விஜய் பெரிய அளவில் அரசியலில் ஆக்டிவாக இல்லை என்ற குற்றச்சாட்டு இப்போதுவரை பரவலாக முன் வைக்கப்படுகிறது. ஆனால் கட்சியினர் சார்பில் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கும் என கூறி வருகிறார்கள்.
கட்சி தொடங்கியதில் இருந்து ஒரு மாநாட்டினை விஜய் நடத்தியுள்ளார். மேலும் அவர் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பில் செம பிசியாக நடித்துக் கொண்டு உள்ளார். அப்படி இருக்கும் போது, அவ்வப்போது மட்டும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். இப்படி இருக்கும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தான் நடக்கிறது. கட்சி தொடங்கியதில் இருந்தே, விஜய்க்கு அடுத்து, புஸ்ஸி ஆனந்த் தான் கட்சியின் சார்பில் வெளியே தெரியும் முகமாக இருக்கிறார்.

தாடி பாலாஜி: இப்படியான நிலையில் புஸ்ஸி ஆனந்த் மீது சராமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், நடிகரும் தவெகவைச் சேர்ந்த வருமான தாடி பாலாஜி. அவர் வைத்துள்ள விமர்சனம் என்பது, புஸ்ஸி ஆனந்த் மட்டும் இல்லாமல், விஜய் மீதும் மறைமுகமாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.விஜய் கட்சி ஆரம்பித்ததும் தவெகவில் இணைந்த பிரபலங்களில் தாடி பாலாஜியும் ஒருவர். மேலும் விஜய் மீது இருக்கும் அன்பினால், விஜய்யின் முகத்தை தனது நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டார் தாடி பாலாஜி. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது.
குற்றச்சாட்டு: அதாவது, " புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் தொடக்கத்திலிருந்தே பயணித்துக் கொண்டிருக்கிறார் தான். அதே நேரத்தில் தன்னை தாண்டி யாரும் விஜய்யை பார்த்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஒரு தொண்டன் தனது மனதில் உள்ள குறையை தலைவனிடம் கூற வேண்டும். அப்படி சொல்லும் போதுதான், கட்சியின் நிலைமை என்ன, தொண்டனின் மனநிலை என்ன என்பது கட்சியின் தலைவருக்கு தெரியும்" என தாடி பாலாஜி விமர்சித்துள்ளார்.

புஸ்ஸி ஆனந்த்: அவரது இந்த விமர்சனம், இதுவரை தவெக குறித்து ஏற்கனவே அரசியல் தளத்தில் புகைச்சலாக இருந்த விஷயம் தான் என்றாலும், முதன் முதலாக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகரான தாடி பாலாஜி இவ்வாறு கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது குற்றச்சாட்டு புஸ்ஸி ஆனந்த் மீது மட்டும் இல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது இருப்பதாக பலர் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











