திரையுலகில் சோகம்.. மரணமடைந்த பிரபலம்.. உருகிப்போய் இரங்கல் தெரிவித்த இயக்குநர்
சென்னை: பாரி இளவழகன் இயக்கி நடித்த திரைப்படம் ஜமா. கடந்த வருடம் இந்தப் படம் ரிலீஸானது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் ரிலீஸாகி; பிறகு பெரும் வரவேற்பை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாரியின் மேக்கிங்கும், நடிப்பும் அட்டகாசமாக இருந்தது என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். இப்படிப்பட்ட சூழலில் அப்படத்தின் கலை இயக்குநரான ஸ்ரீகாந்த் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு இயக்குநர் பாரி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக நல்ல கதையம்சம் உள்ள படங்களே வருவதில்லை என்று பலரும் சொல்வதுண்டு. ஒரே ரத்தம், சண்டை போன்றவைகளை வைத்தே ஒரு படத்தை உருவாக்கிவிடுகிறார்கள்; இது கோலிவுட்டுக்கு ஆபத்தான காலம் என்றெல்லாம் கருத்துக்கள் அதிகமாக எழ ஆரம்பித்திருக்கின்றன. இருப்பினும் அவ்வப்போது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி வரும் படங்களை ரசிகர்களும் கொண்டாடுவதற்கு தவறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமா: அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் ஒன்றுதான் ஜமா. பாரி இளவழகன் என்கிற புதுமுகம் இயக்கி நடித்த படம்தான் ஜமா. இதில் அவருடன் சேத்தன், அம்மு அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். கடந்த வருடம் இந்தப் படம் வெளியானது. தெருக்கூத்து கலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. தெருக்கூத்து கலையை பற்றி அதிகம் பேசப்படாத தமிழ் சினிமாவில் ஜமா அந்தக் குறையை மாற்றி வைத்தது என்றே சொல்லலாம். அவ்வளவு ஆத்மார்த்தமாக அந்தக் கலையை பற்றி பேசியிருந்தது படம்.
சூப்பர் ஹிட்: இந்தப் படம் ஓடிடியில் வெளியானபோது ரசிகர்கள் அதிகம் கொண்டாடினார்கள். முக்கியமாக தமிழ்நாட்டின் பல ஊர்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதிகமாக திருவண்ணாமலை மற்று அதன் சுற்றுவட்டார பகுதிகளின் நில அமைப்பை காட்சிப்படுத்தியதில்லை. அந்தக் குறையையும் பாரி இளவழகன் இந்தப் படத்தில் மாற்றி வைத்திருந்தார். மேலும் தெருக்கூத்து எதன் அடிப்படையில் இயங்குகிறது; அந்தக் கலைஞர்களின் வாழ்வியல் முறை என பல விஷயங்களை ரொம்பவே எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தார் இளவழகன்.

செம நடிப்பு: படத்தின் ஹீரோவாக நடித்திருந்த பாரி இளவழகன் பெண்களுக்குரிய நளினத்தோடு நடித்திருந்தது வெகுவான பாராட்டை பெற்றது. அதேபோல் சேத்தனிடம் கூனி குறுகிப்போவதும், சொந்தமாக ஜமா ஆரம்பிக்க போராடும்போதும், க்ளைமேக்ஸில் தெருக்கூத்தில் அபாரமாக நடித்ததும் என; பாரிக்குள் ஒரு அட்டகாசமான நடிகர் இருக்கிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் உணர்ந்த படம் ஜமா. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் அடுத்ததாக எந்த மாதிரியான கதைக்களத்தை இயக்கவிருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பையும் அவர் ஏற்படுத்திவிட்டார்.
இசைஞானி இளையராஜா: படத்தின் பெரும் பலங்களில் ஒன்றாக இருந்தது இசைஞானி இளையராஜா. அவரது பின்னணி இசையும் , பாடல்களும் பட்டையை கிளப்பின. சாதாரணமாக ஒரு படத்துக்கு இசையமைக்க ஒத்துக்கொள்ளமாட்டார் ராஜா. ஆனால் அவருக்கு அந்தக் கதை பிடித்துப்போக உடனடியாக ஒத்துக்கொண்டார். மேலும் இயக்குநர் வெற்றிமாறனிடமும் ஜமா படம் குறித்து பேசி அதனை பார்க்க வைத்தார். இப்படி பல நல்ல விஷயங்களை ஜமா திரைப்படமும், அதில் பணியாற்றியவர்களும் செய்தார்கள்.
கலை இயக்குநர் மரணம்: ஆனால் இப்போது அந்தப் படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி வந்திருக்கிறது. அதாவது படத்தின் கலை இயக்குநராஜ ஸ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார். அதுகுறித்து பாரி இளவழகன் தனது முகநூல் பக்கத்தில், "நான் உங்களை மிஸ் செய்கிறேன் சகோதரரே. நீங்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் ஜமா திரைப்படம் இந்த அளவுக்கு வந்திருக்காது. கலை என்று உன் வடிவில் வாழும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து பலரும் அவருக்கும், ஸ்ரீகாந்த்தின் குடும்பத்தாருக்கும் தங்கள் ஆறுதலை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











