விஜய் வேஸ்ட்..திரிஷாவையும் விடல.. சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வரலாமாம்.. இசையமைப்பாளர் அதிரடி
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்திருக்கிறது. திமுக, அதிமுகதான் பிரதான அரசியல் கட்சிகள் என்று இருந்த நிலைமையை விஜய் வந்து மாற்றியிருக்கிறார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜய்யின் செயல்பாடு கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்திருக்கிறது. அதிலும் திருச்சி கிழக்கில் சில நாட்களுக்கு முன்பு அவர் பேசியதை என்ன சொல்வதென தெரியவில்லை என்று தவெகவினரே புலம்புகிறார்கள். இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூலில் காட்டமான பதிவை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில், "அரசியல் - 2026 - 1 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் எழுதும் முதல் அரசியல் கருத்து. ஒரு மாதம் கழித்து பேச, எழுதத் தீர்மானித்திருந்தேன். நான் எதிர்பார்க்காத, எனக்கு ஒவ்வாத முடிவுகள் என்பதால், உணர்வுகள் மேலோங்கி எதுவும் பேசிவிடக்கூடாது என்பதாலும், நான் சொல்வது ஆற்றாமை என்று விளங்கிக்கொள்ளப்பட்டால் கருத்து சென்றடையாது என்பதாலும் இந்தக் காலத்தை எடுத்துக்கொண்டேன்.

தேர்தலுக்கு முன் நான் நடிகர் விஜய்யைய்ப் பற்றியும், அவரது ஆற்றலைப் பற்றியம் பற்றி என்ன கணித்து வைத்திருந்தேனோ, என்ன சொல்லி வந்தேனோ, அதிலிருந்து அவர் கொஞ்சம் கூட மாறுபடவில்லை; நான் சொன்னது அனைத்தும் சரியென நிரூபித்து வருகிறார். அவருடைய செயல்பாட்டில் அதிர்ச்சி அடைந்து வருபவர் அவர்க்கு வாக்களித்தவர்தான். பலர் என்னைத் தொடர்புகொண்டு புலம்பிவருகின்றனர். வெறும் கவர்ச்சி காரணமாக ஒரு நடிகர் இம்மாநிலத்தின் உயர்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, இந்த மாநிலத்துக்கு நேர்ந்த அவமானமாகும்.
அவர்தான் போட்டியாளர்: "நடிகன் என்றால் கேவலமா?" என்கிற சிறுபிள்ளைத்தனமான கேள்வியைக் கேட்கக்கூடாது. எந்தக் கூட்டம் அப்படிக் கேட்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்தப் பதவியின் கோணத்தில் பார்க்கவேண்டும். போட்டியில் இருப்பவரில் யார் அங்கு அமரலாம், அமரவைக்கப்பட வேண்டும் என்பது படித்த, அறிவுள்ள, சிந்திக்கும் திறனுள்ள, பொறுப்புள்ள எல்லாருக்கும் ஓரளவுக்கேனும் தெரியும். படிப்போ, அரசியல் அனுபவமோ, தொலைநோக்குப் பார்வையோ, சேவை சிந்தனையோ, உழைக்கத் தயங்காத மனஉறுதியோ, தியாக உணர்வோ, மக்கள் நல அக்கறையோ, கடைநிலை மக்களின் முன்னேற்ற எண்ணமோ, ஒடுக்கப்பட்டவரின் உயர்வு குறித்த கவலையோ, இம்மாநிலத்தைப் பெருமைபடுத்தும் நோக்கமோ என பலவிதத் தகுதிகளில் ஒருசிலவேனும் இருப்பவரைத்தானே போட்டியாளராகக் கருதமுடியும்.
சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி: நடிகரில் ஒருவேளை சிவகார்த்திகேயனையோ, விஜய் சேதுபதியையோ, கமல்ஹாசனையோ, ரஜ்னிகாந்தையோ தேர்ந்தெடுத்தால் கூட அதில் சில நியாயங்கள் உண்டு. சிவகார்த்திகேயன் - MBA பட்டதாரி, நிர்வாகத்தில் ஏட்டுக்கல்வியும், Project செய்த சமயத்தில் ஓரிரு நிறுவனங்களில் பணிபுரிந்ததும், தந்தையை இழந்து வாழ்க்கைச் சவால்களை ஒரு கட்டத்தில் உணர்ந்ததும், வேலைக்கு அங்கிங்கு முயன்று உயர்ந்த அனுபவம்.
அவருக்கென ஒரு பாதை உண்டு: விஜய் சேதுபதி - அரசு பள்ளியில் படித்து, எல்லாவித அடிமட்ட வேலைகளையும் செய்து, வருமானம் போதாமல் வளைகுடா நாட்டுக்குச் சென்று வாழ்க்கைப் போராட்டத்தின் கடுமையான உண்மைகளை உணர்ந்து, போராடி, வாய்ப்புத் தேடி அலைந்து உயர்ந்த அனுபவம். கமல்ஹாசன் - தீவிர வாசிப்பாளர், அறிவுப்பசி கொண்டவர், சிந்தனையாளர், எழுத்தாளர், உலக வரலாறுகளைப் படித்தவர். அவருக்கென ஒரு பாதை உண்டு.
ரஜினியின் அனுபவம் பலம்: ரஜினிகாந்த் - ஒரு பஸ் கன்டக்டராக இருந்து, போராடி, திரைப்படத்துக்குள் வந்த பிறகும் பல தனிப்பட்ட வாழ்க்கைச் சவால்களைச் சந்தித்து, இந்த இடத்துக்கு உயர்ந்தவர். ஆன்மீக அனுபவமும் ஒரு பலம். இவர்கள் எல்லாருமே நிஜ வாழ்க்கையின் பல கூறுகளைச் சந்தித்து, எதிர்கொண்டு, வெற்றிகண்டவர்கள். ஆனாலும், இவர்களை உடனே முதல்வராக்கிவிட முடியாது. ஒரு சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகக் கூட செயல்பட முடியும். இப்போது அமைச்சர்கள் என்கிற பெயரில் இருக்கிற சில கோமாளிகளைப் பார்க்கும்போது இவர்கள் சிறந்தவராகவே இருப்பார்கள்.
தலைவி தலைவி: நடிகனுக்கு Cutout வைத்தவனும், பாலாபிஷேகம் செய்தவனும், கறுப்புச் சந்தையில் டிக்கெட் விற்றவனும், முதல் நாள் முதல் காட்சிக்கு ஆயிரங்களைக் கொடுத்து டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தப் பரிதாபத்துகுரியவனும், பொழுதுபோக்கான சினிமாவை தன் வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவே பாவிக்கிறவனும், நடிகனை "தலைவா தலைவா" என கொண்டாடுகிற பேதையும், நடிமனின் காதலியை "தலைவி தலைவி" என்று அழைக்கிற தர்க்குறியும் இன்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், சிலர் அமைச்சராகவும் இருக்கிற அவலநிலையைப் பார்த்து வடமாநிலங்கள் சிரிக்கின்றன.
போதுமான ஆதாரம்: இவர்கள் இன்று அந்த இடத்தில் அமர்ந்ததற்கு ஒரே காரணம் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டதுதானே, வேறென்ன? இவர்களுக்கா வாக்களித்தார்கள்? கவர்ச்சி நாயகனுக்குத்தானே! இத்தனை காலம் கட்டிக்காத்த பெருமையும், பேரும் ஒரே நாளில் சிதைந்து, சில வெளிநாடுகளும் கேவலமாகப் பார்க்கும் நிலையும் வந்ததற்குக் காரணம் தமிழ்நாட்டிலுள்ள 1.6 கோடி வாக்காளர்கள். இவருக்குப் பின்நின்று தீவிரமாக ஆதரித்த ஆந்திரா துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாண் இவர் வெற்றியை எப்படி நக்கலடித்தார் என்பதே இதற்குப் போதுமான ஆதாரம்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
