Vijay: ”விஜய்ய பார்த்தா பாவமா இருக்கு... கூட இருக்குறவங்க சரி இல்ல..” ஜேம்ஸ் வசந்தன் அதிரடி!
சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு படத்தில் நடிக்கவுள்ள விஜய், அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனம் திறந்துள்ளார். அதில் விஜய்யை பார்த்தால் பாவமாக இருப்பதாக கூறியுள்ளது வைரலாகி வருகிறது.
விஜய்ய பார்த்தா பாவமா இருக்கு
தமிழில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். தளபதி 69 படத்துக்குப் பின்னர் முழுநேரம் அரசியலில் பயணிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளது தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்த விஜய், 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார்.

விஜய்யின் இந்த முடிவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர கிடைத்து வருகின்றன. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விஜய் அரசியலுக்கு வருவதை பார்த்தால் பாவமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்துள்ள பேட்டியொன்றில் விஜய் அரசியலுக்கு வந்துவிடுவார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அவர் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே அதுபற்றி முகநூலில் எழுதியிருந்ததாகக் கூறியுள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் போதே விஜய்யின் அரசியல் வருகை உறுதியாகிவிட்டது. ஆனால் அவரின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் விஜய்யை பார்க்க பாவமாக உள்ளது. இவ்வளவு உச்சத்தில் இருக்கும் ஒரு ஹீரோ இப்படி முடிவெடுப்பது தவறான விஷயமாகும் எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் விஜய்யின் படங்களுக்கு மிகப் பெரிய ஓபனிங் உள்ளது. ரசிகர்கள் காத்திருந்து அவரது படத்தை பார்க்கின்றனர். அதேபோல் விஜய் வாங்கும் சம்பளமும் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்வது நல்லது இல்லை. அரசியலுக்கு போனா சம்பாதித்த மொத்த பணமும் காலியாகிடும்.
எம்ஜிஆர் கூட முதலமைச்சர் ஆன பின்னரும் நடித்தார். ஆனால், விஜய்யின் இந்த முடிவு அவருக்கு நல்லதல்ல. களத்தில் இறங்கி வேலை பார்ப்பது அவ்வளவு எளிதானது கிடையாது. சினிமாவில் விஜய்யை நம்பி கோடிக்காணக்கில் பிஸினஸ் நடந்துகொண்டிருக்கிறது. பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் இவருக்காக காத்திருக்கின்றனர். அதையெல்லாம் விஜய் நினைத்துப் பார்க்கவில்லை என ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











