வேறு வழியே இல்லாமல்தான் அவரது பாடல்கள் ஹிட் ஆகின்றன.. அனிருத்தை வம்பிழுத்த ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: ஜேம்ஸ் வசந்தன் நிகழ்ச்சி தொகுப்பாளர், இசை ஆசிரியர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர். அவர் இசையமைத்த பாடல்களும் ஹிட்டாகியிருக்கின்றன. மேலும் இயக்குநரும், நடிகருமான சசிக்குமாருக்கு ஜேம்ஸ் வசந்தனே ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தனது மனதில் பட்டதை ஓபனாக பேசக்கூடியவர். இந்தச் சூழலில் இப்போது சென்சேஷனல் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத்தை ஜேம்ஸ் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
சசிக்குமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதன் பிறகு ஈசன், பசங்க, நாணயம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார். முதல் படமான சுப்ரமணியபுரத்தில் அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் ஹிட்டாகின. குறிப்பாக கண்கள் இரண்டால் பாடலும், காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை பாடலும் படம் வெளியானபோது அனைவராலும் முணுமுணுக்கப்பட்டது.

தொலைக்காட்சியில் ஜேம்ஸ் வசந்தன்: ஜேம்ஸ் வசந்தன் இப்போது அனைவராலும் அறியப்படும் இசையமைப்பாளராக இருந்தாலும் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானது ஒரு தொகுப்பாளராக. சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அவை அனைத்தும் மக்களிடம் வரவேற்பையே பெற்றன.
இளையராஜாவை விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்: சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன் பதிவிடும் பதிவுகள் விவாதத்தை கிளப்புபவை. குறிப்பாக இளையராஜா குறித்து அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் பலரால் பேசப்படும். சில காலத்துக்கு முன்புகூட இளையராஜா இசையில் வெளிவந்த என்னுள்ளே என்னுள்ளே பாடலில் குறை சொல்லியிருந்தார். இப்போது இசையமைப்பாளர் அனிருத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.
ஜேம்ஸின் விமர்சனம்: அவர் அளித்த பேட்டியில், "இப்போது வெளியாகும் அனிருத்தின் பாடல்களில் இருக்கும் இசை ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு சவாலாகவே இல்லை. அதை நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அது சினிமா ரசிகர்களுக்கே தெரியும். இப்போது வெளியாகும் அனிருத்தின் பாடல்கள் எல்லாம் வேறு வழியே இல்லாமல்தான் ஹிட்டாகிக்கொண்டிருக்கின்றன. பெரிய தயாரிப்பாளர்களும், ஷங்கர் போன்ற பிரமாண்ட பட இயக்குநர்களும் தங்களது படத்தில் அனிருத்தின் இசை வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
நம்பர் ஒன் ரஹ்மானே: ஆனால் உலக அளவில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும்தான். அனிருத்தின் பாடல்கள் ஹிந்தி, தெலுங்கில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அதேசமயம் ரஹ்மானின் பாடல்கள் சர்வதேச அளவில் ரீச் ஆனவை. அவற்றை இப்போதுவரை யாராலும் தொட முடியவில்லை" என்றார். முன்னதாக அனிருத் வரிசையாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இசையமைத்துவருகிறார். மேலும் அடுத்த பத்து மாதங்களில் 50 பாடல்களை உருவாக்க வேண்டும் என்று அனி பேசியதை அடுத்து அவரை பலரும் கடுமையாக கிண்டல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











