ஜனநாயகன் தளபதி திருவிழா.. விஜய் அப்பா, அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு.. முகத்தில் மகிழ்ச்சியை பாருங்க
சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கவிருக்கிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் தளபதி திருவிழாவில் ஏராளமான பின்னணி பாடகர்களும், பாடகிகளும் மேடையில் விஜய் பட பாடல்களை பாடவிருக்கிறார்கள். இதுதான் விஜய்க்கு நடக்கும் கடைசி இசை வெளியீட்டு விழா என்பதால் ரசிகர்கள் அனைவருமே ரொம்பவெ எமோஷனலாகவும் இருக்கிறார்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படமும் பத்தாம் தேதி வெளியாகிறது. எஸ்கே போட்டிக்கு வந்தாலும் இது விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்படுவதால் ரொம்பவே ஆர்வமாக இப்படத்தை பார்ப்பதற்கு அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை வெளியீட்டு விழா: படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த நிகழ்ச்சியானது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. 90,000க்கும் அதிகமானோர் அமரும் வசதி, 70,000 கார்கள்வரை பார்க்கிங் வசதி என பிரமாண்டமாக இருக்கும் அந்த மைதானத்தில் விழா இன்று களைகட்டப்போவது உறுதி.

தளபதி திருவிழா: இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தளபதி திருவிழா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, ஹரி சரண், எஸ்.பி.பி சரண், க்ரிஷ், சின்மயி என ஏராளமான பின்னணி பாடகர்களும், பாடகிகளும் இதில் கலந்துகொண்டு விஜய் பட பாடல்களை பாடி நாஸ்டாலஜியா மொமண்ட்டுக்கு ரசிகர்களை அழைத்து செல்லவிருக்கிறார்கள். ஏராளமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாகவும்; நிச்சயம் 80,000க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்றும் கடல் கடந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் விஜய்: இதில் கலந்துகொள்வதற்காக நேற்று தனது தாய் மற்றும் உறவினர்களுடன் மலேசியாவுக்கு தனி விமானத்தில் சென்றார் விஜய். அங்கு அவருக்கு மலேசிய சிறுவர்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்பு கொடுத்தார்கள். அவர் தங்கும் இடத்துக்கு காரில் செல்லும்போது சாலையில் இருந்த ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த; தளபதியும் பதிலுக்கு வெளிப்படுத்தினார். அதுதொடர்பான வீடியோக்கள்தான் சோஷியல் மீடியா எங்கும் இருக்கிறது.
தாய் - தந்தைக்கு வரவேற்பு: இந்நிலையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருக்கும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை இரண்டு பேருமே நிறைந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். இப்போது அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. மேலும் இதன் மூலம் விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் இருந்த மன கசப்பு எல்லாம் தீர்ந்துவிட்டது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











