ஜனநாயகன் சென்சார் பிரச்னை.. ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளிப்போகிறதா ஜனநாயகன்?.. இது என்ன புது ட்விஸ்ட்?
சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போதுவரை தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த தயாரிப்பு நிறுவனம் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம்தான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவெ உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ட்ரெய்லர் இது பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என்பதை உறுதி செய்துவிட்டது. ஆனாலும் தளபதி ஃபேன்ஸ் நம்பிக்கை இழக்கவில்லை. விஜய்யும், வினோத்தும் சேர்ந்து நிச்சயம் ஏதோ ஒரு மேஜிக்கை செய்திருப்பார்கள் என்று அடித்து சொல்கிறார்கள்.
தணிக்கை சான்றிதழ் இல்லை: படமானது ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கும் நிலையில் இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. கடந்த டிசம்பர் மாதமே படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள்; சில மாற்றங்களை சொன்னதாகவும்; அதை படக்குழு செய்தும் சர்ட்டிஃபிக்கேட் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் ஜனநாயகனுக்கு தொடர்ந்து சிக்கல் நிலவிவருகிறது.

நீதிமன்றம் சென்ற கேவிஎன்: இனியும் பொறுத்திருந்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், "ஜனநாயகன் படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. எனினும் இன்னும் தணிக்கை குழு சான்றிதழ் வழங்கவில்லை. படத்தை தணிக்கை குழுவினர் பார்ப்பதற்காக கடந்த மாதமே அனுப்பினோம். டிசம்பர் 19ஆம் தேதி படத்தை பார்த்த அவர்கள் சொன்ன மாற்றத்தை செய்து மறு தணிக்கைக்கும் அனுப்பப்பட்டது. ஆனாலும் இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
நாளை ஒத்தி வைப்பு: கேவிஎன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்தது நீதிமன்றம். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறது. இதற்கிடையே நாளையும் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காவிட்டால்; ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாவது சாத்தியமே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரசிகர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
நீதிபதி கேட்டது: இது ஒருபக்கம் இருக்க வழக்கு விசாரணையின்போது, 'தை பிறந்தால் வழி பிறக்கும். ஜனநாயகன் படத்தின் ரிலீஸை ஏன் ஜனவரி பத்தாம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது' என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இது விஜய் ரசிகர்களுக்கு மேற்கொண்டு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே பராசக்தி படம் ஜனவரி பத்தாம் தேதிதான் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பராசக்திக்கு ஒருநாள் முன்னதாக ஜனநாயகன் ரிலீஸாவதற்கே எஸ்கே ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் சோஷியல் மீடியாவில் மோதல் எக்கச்சக்கமாக இருக்கிறது. ஒருவேளை பத்தாம் தேதி ரிலீஸானால் என்ன ஆகுமோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











