ஜன நாயகன் படம் லீக்.. 6 பேர் அதிரடி கைது.. சைபர் கிரைம் வீசிய வலையில் தொக்காக சிக்கிய சஸ்பெக்ட்ஸ்!
சென்னை: நடிகர் விஜய் நடித்து உருவாகி ரிலீஸ் சான்றிதழுக்காக காத்துக் கொண்டு இருந்த ஜன நாயகன் படத்தை இணையத்தில் யாரோ சட்டவிரோதமாக பதிவேற்றினர். இதனால் இணையத்தில் படம் வெளியானதால் இணையவாசிகள், விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் படத்தை சட்டவிரோதமான முறையில் பதிவிறக்கம் செய்து பார்த்தனர். இது தொடர்பாக மொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உள்ள நிலையில், படக்குழு தரப்பிலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தரப்பிலும் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் முதற்கட்டமாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

KVN நிறுவனம் தயாரிப்பில் விஜய் தனது கெரியரில் அதிக சம்பளம் வாங்கி நடித்துள்ள படம் ஜன நாயகன். இந்த படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடிகள் செலவில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜய்யின் கடைசி படம் என்று அவரே அறிவித்தார். அதேபோல் இது தெலுங்கில் வெளியான படமான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீ மேக்.
படம் கடந்த ஜனவரி இரண்டாவது வாரத்தில் பொங்கல் விடுமுறையில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்திற்கு ரிலீஸ் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. நீதி மன்ற வழக்கு, CBFC விதிமீறல் மற்றும் ஆட்சேபணை என பல காரணங்களால் படத்திற்கு ரிலீஸ் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை. இப்படி இருக்கையில் படம் இணையத்தில் எப்படிக் கசிந்தது என்ற கேள்வி பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.
புகார்: ஏற்கனவே இந்த பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவரது கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது. படம் இணையத்தில் லீக் ஆனது தொடர்பாக மொத்த படக்குழுவினரும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி விட்டனர். ஆனால் நடிகர் விஜய் மட்டும் எதுவும் பேசாமல் கப்சிப் என இருக்கிறார். இவரது அமைதியை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.
யார் காரணம்?: அதேநேரத்தில் லீக் ஆன படத்தில் எடிட்டிங் என்ற ரெஃபரன்ஸ் மார்க் இருப்பதால் இது படக்குழுவிற்கு நெருக்கமான வட்டத்தில் இருந்துதான் படம் லீக் ஆகி இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. பலரும் CBFC-இல் இருந்து தான் படத்தை லீக் செய்து விட்டனர் என்று பலரும் விமர்சிக்க, CBFC தரப்பில் இருந்து, ஜன நாயகன் லீக் ஆனதற்கும் CBFC தெளிவான விளக்கத்தை அளித்துவிட்டனர்.
6 பேர் கைது: இந்நிலையில் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்டமாக 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இவர்களில் யார் முதல் குற்றவாளி, அல்லது முதல் குற்றவாளி இவர்கள் இல்லாமல் வேறு ஒருவரா என பல கேள்விகளை பலரும் முன்வைத்து வருகிறார்கள். அதேபோல் எதன் அடிப்படையில் இந்த 6 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர் என பல கேள்விகளையும் இணையவாசிகளும் ரசிகர்களும் முன் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











