அசிங்கமான அரசியல்.. எவ்வளவு மன அழுத்தம் ஏற்படும் தெரியுமா?.. ஜன நாயகன் லீக்.. மோகன் ஜி கண்டனம்!
சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படம் இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரையரங்குகளில் வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் கேவிஎன் தரப்பு செய்த நிலையில், வேண்டுமென்றே அந்த படத்தை முடக்க வேண்டும் என தணிக்கை குழுவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு ஒரே ஒரு நபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் நிறுத்தினர்.
அதன் பின்னர் நியாயத்துக்காக நீதிமன்ற படிகளை தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ஏறியது. தனி நீதிபதி தாமதப்படுத்தினாலும் ஜனவரி 9க்குப் பிறகு ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், தணிக்கை குழு மேல்முறையீடு செய்து மீண்டும் படத்தின் ரிலீஸை தடுத்தது.

தொடர்ந்து வழக்கு இழுத்தடிக்கப்பட்ட நிலையில், வழக்கையும் படக்குழு வாபஸ் பெற்றது. ஆனால், இன்னமும் மறு ஆய்வுக்குழு படத்தை பார்த்து முடித்த பின்னரும் தணிக்கை சான்று வழங்கப்படவில்லை. இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ஜன நாயகன் மொத்த படமும் இணையத்தில் கசிந்துள்ளது படக்குழுவை எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் தெரியுமா என இயக்குநர் மோகன் ஜி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
எடிட்டிங் டேபிளில் இருந்து கசிந்ததா?: ஜன நாயகன் படம் மொத்தமும் லீக் ஆகியிருப்பது சினிமா துறையையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படத்தை நம்பி பல தியேட்டர் பிசினஸ் உள்ள நிலையில், அனைத்துக்கும் ஆப்பு வைத்தது போல படம் ஆன்லைனில் லீக் ஆகி அதை விஜய்க்கு எதிரான ரசிகர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் ஷேர் செய்து வருகின்றனர். தணிக்கை குழுவில் இருந்து படம் லீக்காகவில்லை என தெரிகிறது. வாட்டர் மார்க்கில் தெளிவாக எடிட்டிங் வெர்ஷன் என உள்ளதால் எடிட்டிங் டேபிளில் இருந்து லீக் ஆனதா? யாரு அந்த கருப்பு ஆடு என ரசிகர்களே விளாசி வருகின்றனர்.
மோகன் ஜி கண்டனம்: "எதிர்பார்ப்பு இல்லாத ஓர் திரைப்படம், திரையரங்கத்தில் வெளியாவதற்கு முன் இணையத்தில் கசிந்தாலே அதை உருவாக்கியவர்கள் கதிகலங்கி போவார்கள்.. இவ்வளவு பெரிய படத்தின் காட்சிகள் இப்படி வெளியாவது, உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடி, மன அழுத்தத்தை உருவாக்கும்.. அவர்கள் இடத்தில் இருந்து யோசித்து இப்படி பரப்புவதை நிறுத்துங்கள்.. அரசியல்" என இயக்குநர் மோகன் ஜி தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
கரூர் முதல் ஜன நாயகன் லீக் வரை: விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததில் இருந்தே அவருக்கு எதிராக ஏகப்பட்ட சதி வலைகள் தொடர்ந்து பின்னப்பட்டு வருகின்றன. கரூர் கூட்டத்தில் திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பரிதாபமாக 41 பேர் பலியானது. விஜய்யின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு, விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து தகவல்கள் நீதிமன்றத்தில் இருந்தே லீக் ஆனது மற்றும் எல்லாத்துக்கும் மேலாக தற்போது ஜன நாயகன் மொத்த படமும் ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் கசிந்தது என தொடர்ந்து விஜய்க்கு எதிரான அரசியல் சதி அரங்கேறி வருவதாக பலரும் கொந்தளித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் விஜய் தான் இதையெல்லாம் செய்து தனது அரசியல் மைலேஜை ஏற்ற பார்க்கிறார் என்றும் எதிர்கட்சியினர் விஜய் தரப்பை குற்றஞ்சாட்டி வருவதையும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications











