சென்சாரே இல்லாமல்.. ஜன நாயகனை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர தடாலடி முடிவு?.. விஷயம் இதுதானா?
சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாகக் கூறப்படும் "ஜன நாயகன்" திரைப்படம் அவரது பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், படம் குறித்த புதிய தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் "ஜன நாயகன்" திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவுள்ள விஜய்யின் கடைசி படமாக இது பார்க்கப்படுவதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், படம் திட்டமிட்டபடி தியேட்டர்களில் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டில் பரவி வரும் தகவல்களின்படி, "ஜன நாயகன்" திரைப்படம் மொத்தமாகவே ஏற்கனவே இணையத்தில் கசிந்துவிட்டது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் இருப்பதுடன் மொத்த திரையுலகமும் பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 15 பேரை தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை கைது செய்துள்ளது. இதன் காரணமாக படத்தின் வெளியீட்டு திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்சார் பிரச்னை: அதுமட்டுமின்றி, திரைப்படத்தின் சென்சார் தொடர்பான சில விஷயங்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பதால், அதனால் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பு தரப்பு தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளையில், படத்திற்காக பணத்தைக் கட்டிய விநியோகஸ்தர்கள் தாங்கள் வழங்கிய தொகை குறித்து தயாரிப்பாளரிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.
ஓடிடி?: இதன் காரணமாகவே, "ஜன நாயகன்" திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்ற யூகங்களும் தற்போது அதிகரித்துள்ளன. தியேட்டர் வெளியீட்டை விட டிஜிட்டல் வெளியீடு பாதுகாப்பானதாக இருக்கும் என்று சிலர் கருதுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக படக்குழு அல்லது தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் ஆர்வம்: விஜய் ரசிகர்கள் தரப்பில் மட்டும் படம் கண்டிப்பாக தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக அவரது பிறந்த நாளில் வெளியாகும் படமாக "ஜன நாயகன்" அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்ற டைட்டில் கார்டை தியேட்டரில் பார்த்து ஃபயர் விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதேநேரத்தில், கோலிவுட்டில் உலா வரும் இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை, படம் உண்மையில் எந்த வகையில் வெளியாகப் போகிறது என்பது குறித்த தெளிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications