சந்தோஷம் நிலைக்கலையே.. ஜனநாயகன் இன்று சென்சார் சான்றிதழ் பெற வாய்ப்பில்லை.. தணிக்கை குழு வைத்த செக்
சென்னை: ஜனநாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் படக்குழுவும், விஜய்யின் ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் அவர்களது மகிழ்ச்சியை கெடுக்கும் வகையில் மத்திய தணிக்கை குழு வாரியம் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. இதனால் சான்றிதழ் இன்று கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் முதலில் சில மாற்றங்களை சொன்னார்கள். அதை செய்து மறு ஆய்வு கமிட்டிக்கு படக்குழு படத்தை அனுப்பியது. அவர்களும் சான்றிதழ் தர மறுத்ததால்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதனை விசாரித்த நீதிபதி, ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸிலிருந்து ஏன் தள்ளிப்போகக்கூடாது. தை பிறந்தால் வழி பிறக்குமே என்று கேட்டு தீர்ப்பை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.
இன்று வந்த தீர்ப்பு: அறிவித்தபடி இன்று தீர்ப்பை வழங்கினார் நீதிபதி. அதில், 'ஜனநாயகன் படத்துக்கு இன்றே யு/ஏ சான்றிதழை வழங்க வேண்டும். மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்ற உத்தரவையும் ரத்து செய்கிறேன்' என அதிரடியாக தெரிவித்தார். ஜனநாயகன் படத்துக்கு இருந்த சிக்கல் அனைத்தும் தீர்ந்துவிட்டதாக படக்குழுவினரும், விஜய்யின் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடினார்கள்.

எப்போது ரிலீஸ்?: அதுமட்டுமின்றி சென்சார் சான்றிதழை இன்றே வழங்க வேண்டும் என கோர்ட் சொல்லிவிட்டதால்; எப்படியும் இன்று சான்றிதழ் கிடைத்துவிடும் என மகிழ்ச்சியடைந்த அவர்கள்; அடுத்த ரிலீஸ் தேதி பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். இன்றே சர்ட்டிஃபிக்கேட்டை பெற்று ஜனவரி 12 அல்லது ஜனவரி 14ஆம் தேதி வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கிளம்பிவிட்டது. எனவே இந்தப் பொங்கல் தளபதி பொங்கல்தான் என்றும் உறுதியாக சொல்ல தொடங்கினார்கள் ரசிகர்கள்.
தணிக்கை வாரியம் வைத்த செக்: ஆனால் மத்திய தணிக்கை குழு வாரியம் ஒரு செக்கை வைத்திருக்கிறது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதில் அளித்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தரப்பு மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கினை ஜனவரி 12ஆம் தேதியில் விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதற்கு நீதிபதியோ நீங்கள் முதலில் வழக்கை தாக்கல் செய்யுங்கள். எப்போது விசாரிக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்கிறோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அநேகமாக இன்று பிற்பகல் விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது.
ரிலீஸ் இல்லை: தணிக்கை குழுவின் மேல்முறையீட்டு காரணமாக இன்று படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மேலும் ஒருவேளை 12ஆம் தேதி இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டால்; அன்றைய தினமும் படம் ரிலீஸாக வாய்ப்பு இல்லாததால்; சந்தோஷத்தில் இருந்த விஜய் ரசிகர்கள் மீண்டும் தலை மேல் கையை வைத்து உட்கார்ந்துவிட்டார்கள். விஜய்யின் கடைசி படத்துக்கு இவ்வளவு சோதனையா?


Click it and Unblock the Notifications











