பகவந்த் கேசரி ரீமேக்காவே இருந்தாலும் ஜனநாயகன் பந்தயம் அடிக்கும்.. ஏன் தெரியுமா?.. தாராளமா நம்பலாம்
சென்னை: வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் (ஒன்பதாம் தேதி) ரிலீஸாகவுள்ளது. இப்படம் ரீமேக்கா இல்லை ஒரிஜினல் கதையா என்பது தெரியாமல் தலையை பிய்த்துகொண்டிருந்தார்கள் தளபதி ரசிகர்கள். நேற்று வெளியான இதன் ட்ரெய்லர் இது பகவந்த் கேசரி ரீமேக்தான் என்பதை உறுதி செய்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் 33 வருடங்களாக ரசிகர்களை மகிழ்வித்த விஜய்; ஜனநாயகன் படத்தோடு விடைபெறவிருக்கிறார் என கூறப்பட்டிருக்கிறது. எனவே கடைசி படம் என கருதப்படம் ஜனநாயகனை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு தயாராகிவருகிறார்கள் ரசிகர்கள். ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. இதுவரை படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் எல்லாம் பட்டைய கிளப்பியிருக்கின்றன.
பகவந்த் கேசரி ரீமேக்: நேற்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. நேற்று முன்தினம் வரை இந்தப் படம் பகவந்த் கேசரி ரீமேக்கா இல்லையா என தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டிருந்தார்கள். வினோத்தும் அதுகுறித்து மேம்போக்காகவே சில மேடைகளில் பேசியிருந்தார். நேற்று வந்த ட்ரெய்லர்; அத்தனை சந்தேகங்களையும் தீர்த்து; இது பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி ரீமேக்தான் என்பதை ஆணித்தரமாக சொல்லிவிட்டது. இது ஒருவித பயத்தை கொடுத்திருக்கிறது ரசிகர்களுக்கு.
நல்ல படம்தான்: அதேசமயம் விஜய் ரசிகர்கள் பயப்படும் அளவுக்கு பகவந்த் கேசரி ஒன்னும் மோசமான படம் இல்லை. பெண்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், கமர்ஷியல் வேல்யூக்கள் என அத்தனையும் அடங்கியதுதான் அப்படம். அந்தப் படம் தெலுங்கில் மெகா ஹிட்டானது. இருந்தாலும் ரசிகர்கள் பயப்படுவதற்கு காரணம்; அந்தப் படத்தை அப்படியே தமிழுக்கு வினோத் மாற்றியிருப்பாரோ என்பதை நினைத்துதான். ஆனால் வினோத் அப்படிப்பட்ட இயக்குநர் இல்லை.

நேர்கொண்ட பார்வை சாட்சி: அதற்கு சாட்சியாக அஜித்தை வைத்து அவர் இயக்கிய நேர்கொண்ட பார்வை படத்தை சொல்லலாம். அது பிங்க் படத்தின் ரீமேக்காக இருந்தாலும்; தமிழில் அஜித் நடித்திருந்ததால் அவரது ரசிகர்களை மனதில் வைத்து ஆக்ஷன் உள்ளிட்ட சில காட்சிகளை சேர்த்திருப்பார். அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகாவிட்டாலும்; ஒரு படத்தை அப்படியே ரீமேக்கியிருக்கமாட்டார் வினோத் என்பதற்காக அதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
அரசியல் வசனங்களும்: அதுமட்டுமின்றி விஜய் அரசியல் பிரவேசம் செய்திருக்கும் இந்த சூழலில் பகவந்த் கேசரி ரீமேக் நிச்சயம் அவருக்கு உதவி செய்வதாகத்தான் இருக்கும். பெண்கள் மற்றும் ஃபேமிலிகளை ஈஸியாக கவர்ந்துவிடலாம். மேலும், ட்ரெய்லரிலேயே படத்தில் இருக்கும் சில அரசியல் வசனங்கள் பட்டையை கிளப்புகின்றன. அடிப்படையில் ஹெச்.வினோத் மிகச்சிறப்பாக வசனங்கள் எழுதக்கூடியவர். சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களில் இடம்பெற்ற வசனங்களை பற்றி சொல்லவே வேண்டாம். எனவே இந்தப் படத்தில் அவர் எழுதியிருக்கும் வசனங்கள் நிச்சயம் காப்பாற்றும் என நம்பலாம்.
அதேபோல், வினோத்தின் மேக்கிங்கும் அட்டகாசமாக இருக்கக்கூடியது. விஜய் என்ற பெரிய மாஸ் ஹீரோவுக்கு எப்படி ஃப்ரேம் வைக்க வேண்டும், அவரது ரசிகர்களுக்கு எப்படியெல்லாம் கூஸ்பம்ப்ஸை தர வேண்டும் போன்ற வித்தைகளை எல்லாம் அத்துப்படியாக தெரிந்துவைத்திருப்பவர். எனவே அந்த ஏரியாக்களிலும் வினோத் தனது விளையாட்டை ஆடியிருப்பார் என எதிர்பார்க்கலாம். படத்தின் இரண்டாம் பாதியில் மாற்றம், வில்லன் போர்ஷனில் மாற்றம், ரோபோ சண்டை ஆகியவைகளை எல்லாம் படத்தில் சேர்த்திருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது. அவை அனைத்தையும் வினோத் தனது ஸ்டைலில்தான் உருவாக்கியிருப்பார்.
அனைத்துக்கும் மேலே: இவை அனைத்துக்கும் மேலே விஜய் என்ற ஒரு நடிகர் அவ்வளவு எளிதாக தனது கடைசி படத்தை விட்டுக்கொடுத்துவிட மாட்டார் என்றே சொல்ல வேண்டும். அவரது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ், டயலாக் டெலிவரி, ஆக்ஷன்கள் எல்லாம் பாலைய்யாவைவிட சிறப்பாகவே இருக்கும். இது பகவந்த் கேசரி ரீமேக்காவே இருந்தாலும் விஜய் அந்தக் கதையில் நடிக்கும்போது அது வேறு ஒரு ஃப்ளேவரில் இருக்கும். பகவந்த் கேசரியில் எக்கச்சக்க ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை பாலகிருஷ்ணா செய்தபோது காமெடியாக இருந்தன. ஆனால் விஜய் செய்யும்போது யாரும் கிண்டல் செய்யமாட்டார்கள். ஆக்ஷன் காட்சிகளுக்கு பெயர் போனவர்தானே தளபதி. இப்படி பல விஷயங்கள் ஜனநாயகனை காப்பாற்றும் என்றே சொல்லலாம். நிச்சயமாக வினோத்தும், விஜய்யும் சேர்ந்து பொங்கலுக்கு பந்தயம் அடிப்பார்கள். இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











