ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் களமாடலா?... பிரபலம் ஓபன்
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி பத்தாம் தேதியும் ரிலீஸாகின்றன. அடுத்தடுத்த நாட்களில் படம் வெளியானாலும் 2026ஆம் ஆண்டு பொங்கல் ஜனநாயகன் vs பராசக்தி போட்டிதான் என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் சில கருத்துக்களையும் கூறிய சூழலில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு இதுகுறித்து பேசியிருக்கிறார்.
ஹெச்.வினோத் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் ஜனநாயகன் படம்தான் தளபதிக்கு கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு திரையில் அவரை பார்க்க முடியாது என்பதால்; இப்படத்தின் ரிலீஸை பண்டிகை போல் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது படம். முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் ரேட் எவ்வளவாக இருந்தாலும் அதை கொடுத்து பார்க்கும் மைண்ட் செட்டில்தான் அனைவரும் இருக்கிறார்கள்.
வசூல் வேட்டை நடத்துமா?: சாதாரணமாகவே விஜய் படம் முதல் நாள் கலெக்ஷனில் வேட்டை நடத்தும். இது கடைசி படம் என கருதப்படுவதால் நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரைத்துறையினர் கணித்திருந்தார்கள். ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக 14ஆம் தேதி வெளியாவதாக இருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி நான்கு நாட்களுக்கு முன்னதாகவே பத்தாம் தேதி ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு வெற்றி?: விஜய்யுடன் போட்டிப்போடும் மனப்பான்மை சிவாவுக்கு இல்லாவிட்டாலும்; அவர்தான் வேண்டுமென்றே இந்தப் போட்டியை உருவாக்கிவிட்டார் என்று தொடர்ந்து ஒருதரப்பினர் சொல்லிவருகிறார்கள். எஸ்கேவின் மார்க்கெட்டும் இப்போது உச்சத்தில் இருப்பதன் காரணமாகல் இந்தப் பொங்கலுக்கு விஜய் வெற்றியடைவாரா இல்லை சிவா வெற்றியடைவாரா என்ற மில்லியன் டாலர் கேள்வியும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் எழுந்திருக்கிறது.
வலுக்கும் மோதல்கள்?: இது ஒருபக்கம் இருக்க பராசக்தியின் வருகை கண்டிப்பாக ஜனநாயகனின் வசூலை பாதிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதனால் காண்டான விஜய் ரசிகர்களோ, கோட் படத்தில் தனது துப்பாக்கியை கொடுத்த விஜய்யிடமே சிவகார்த்திகேயன் போட்டிப்போடும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரா; இப்படி அவர் செய்வார் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவரது ரசிகர்களில் சிலர் ஓபனாகவே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "ஜனநாயகன் Vs பராசக்தி பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் சிவகர்த்திகேயனுக்கு எதிராக எந்த ஒரு அமர்க்களமும் செய்யவில்லை. சோஷியல் மீடியாவில் யாரோ ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். அதை வைத்து கிளப்பிவிடுகிறார்கள். ஏன் இதை பெரிதாக்குகிறார்கள் என தெரியவில்லை.
இருவரின் உயரமும் வேறு: அரசியலில் விஜய் இன்று பெரிய இடத்தில் இருக்கிறார். அவரை பற்றி பேச வேண்டாம் என பாஜகவை சேர்ந்தவர் சொல்கிறார். கூட்டணி வைத்துக்கொள்ளலாமா என்று காங்கிரஸ் கேட்கிறது. விஜய்யின் உயரம் என்ன; தன்னுடைய உயரம் என்ன என்பது சிவகார்த்திகேயனுக்கே தெரியும். விஜய்யின் நிலைமை வேறு இடத்துக்கு போய்விட்டது. கடைசி படம் ரிலீஸாகப்போகிறது. ஜனநாயகனுக்கு அடுத்த நாள் பராசக்தி வருகிறது. வரட்டும். ஒரே நாளில் க்ளாஷ் விடவில்லைதானே. பிறகு ஏன் இப்படி கிளப்புகிறார்கள். விஜய் ரசிகர்கள் சிவாவுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











