பராசக்தி, ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்கள்.. எதையும் எதிர்க்கலாம்.. அரசியலாக்க முடியாது.. சரத்குமார் அதிரடி
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி ஒன்பதாம் தேதியும், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படம் ஜனவரி பத்தாம் தேதியும் ரிலீஸ் செய்வதற்கு பிளான் செய்திருந்தார்கள். ஆனால் ஜனநாயகனுக்கு சென்சார் பிரச்னை ஏற்பட்டதால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அதேசமயம் திட்டமிட்டபடி பராசக்தி படம் கடந்த பத்தாம் தேதி வெளியானது. இந்நிலையில் சரத்குமார் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று சொல்லப்பட்டது. எனவே இப்படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு தளபதியின் ரசிகர்கள் முழுவீச்சில் தயாரானார்கள். அதன்படி ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதால் இப்போது ரிலீஸானால் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு மைலேஜ் கிடைக்கும் எனவும் கணக்கு போட்டிருந்தார்கள்.
வைக்கப்பட்ட ஆப்பு: ஆனால் அதற்கு ஆப்பு வைக்கும்படியாக சென்சார் அதிகாரிகள் செயல்பட்டார்கள். படத்தை பார்த்து அவர்கள் சொன்ன திருத்தங்களை செய்த பிறகும் சென்சார் சான்றிதழ் கொடுக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். இதன் காரணமாக கேவிஎன் நிறுவனம் நீதிமன்றம் சென்றது. தனி நீதிபதி படத்துக்கு சாதகமான தீர்ப்பு வழங்க; மத்திய தணிக்கை குழு வாரியம் செய்த மேல்முறையீட்டில் பாதகமான தீர்ப்பு வந்தது. தற்போது இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் பராசக்தி: இதற்கிடையே ஜனநாயகனுக்கு போட்டியாக பத்தாம் தேதி பராசக்தி பிளான் செய்யப்பட்டது. ஜனநாயகன் வெளியாகாத காரணத்தால் அந்த தேதியில் சோலோ ரிலீஸாக வந்தது பராசக்தி. இப்படத்துக்கும் சென்சார் அதிகாரிகள் முட்டுக்கட்டையை போட்டார்கள்தான். மொத்தம் 25 இடங்களில் அவர்கள் சொன்ன திருத்தங்களை படக்குழு செய்ததால்; பிளான் செய்தபடி பத்தாம் தேதியே ரிலீஸானது. படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது.
சரத்குமார் பேட்டி: இந்நிலையில் நடிகரும், பாஜகவை சேர்ந்தவருமான சரத்குமார் இவ்விரண்டு படங்கள் பற்றி பேசியிருக்கிறார். செய்தியாளரிடம் பேசிய அவர், "பராசக்தி என்பது தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட படம். இது 1965-ஆம் ஆண்டைச் சேர்ந்தது; அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம். இந்தி மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக்க முயன்றதால்தான் மக்கள் இப்படிப்பட்ட முறையில் நடத்தப்பட்டார்கள். அந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது என்ன நடந்தது என்பதையே இந்தப் படம் காட்டுகிறது.
அரசியலாக்க முடியாது: ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சில எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. சென்சார் போர்டு என்பது ஒரு சுயாதீனமான அமைப்பு. நான் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்தாலும், என் படம் நான்கு ஆண்டுகள் தடைபட்டிருக்க முடிந்தால்; வெளியிடத் தகுதி இல்லை என்று அவர்கள் கருதும் எந்தப் படத்தையும் சென்சார் போர்டு எதிர்க்கலாம். இந்த நாட்டில் நடக்கும் எல்லாவற்றையும் அரசியலாக்க முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











