ஜனநாயகன் விவகாரம்.. சென்சாரில் இருக்கும் 4 பேர் சொல்வதை கேட்கணுமா?விஷால் பேட்டி!
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில், வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் உதவி கேட்டு வந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கலாம் என்றார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம் அதன் படி, 2026 - 2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று (பிப்ரவரி 22ந்தேதி) நடைபெற்றது. இதில், ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர், 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிட்டுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இராம நாராயணன் அணி மற்றும் நலம் காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டுள்ளது. காலை 8 மணி முதல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில்,ரஜினிகாந்த், கார்த்திக் ராஜா, கே.எஸ் ரவிகுமார், டிராஜேந்தர், குஷ்பு, சுஹாசினி, பவர் ஸ்டார், தேவயானி என பலர் வாக்களித்து வருகின்றனர்.
நடிகர் விஷால்: அந்த வகையில் வாக்களிக்க வந்த நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ஜனநாயகன் பிரச்சனைக்கு ஒருவர் மட்டும் சென்று குரல் கொடுப்பதில் எந்தவிதமான பலனையும் தராது. ஒருவர் மட்டும் சென்று குரல் கொடுக்காமல், 1519 தயாரிப்பாளர்களும் ஒட்டுமொத்தமாக சென்று சென்சார் போர்ட் அலுவலகத்தில் முன் நின்று இருக்க வேண்டும். இதற்காகத்தான் யார் ஜெயித்தாலும், தோற்றாலும் அனைவரும் இணைந்து வேலை செய்ய வேண்டும் என நான் சொல்கிறேன். அதை செய்தால் தமிழ் சினிமா இன்னும் செழிப்பாக இருக்கும் என்றார்.
உடன்பாடு இல்லை: மேலும், ஜனநாயகன் பிரச்சனையை தொடர்பாக கேவிஎம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி இருந்தால், ஒருவேளை தீர்வு கிடைத்திருக்கலாம். ஆனால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது நீதிபதியை நாங்கள் எப்படி கேள்வி கேட்க முடியும். சென்சார் போர்ட் என்பது ஒரு முக்கியமான வாரியம். ஆனால், ஏழு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், நான்கு, ஐந்து பேர் மட்டுமே அமர்ந்து கொண்டு, மக்கள் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்க கூடாது என முடிவு செய்கிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அதுதான் விதிமுறை என்பதால் அதன்படி தான் நாம் செய்ய வேண்டி இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications