Japan Making Video - பட்டையை கிளப்பும் ஜப்பான் மேக்கிங் வீடியோ.. கார்த்திக்கு ஒரு ஹிட் பார்சலோ
சென்னை: Japan Making Video (ஜப்பான் மேக்கிங் வீடியோ) கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ஜப்பான் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் கார்த்தி. தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி அந்தக் கதாபாத்திரமாகவும் வாழக்கூடியவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் கார்த்தி தான் ஏற்றிருந்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருந்தார்.

ஜப்பான்: அவர் தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவருடன் அனு இம்மானுவேல், விஜய் மில்டன், வாகை சந்திரசேகர், சுனில் உள்ளிட்டோரும் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கம் என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
என்ன கதை?: இந்தப் படத்தில் கார்த்தி திருடனாக நடித்திருக்கிறார் என்று இயக்குநர் ராஜுமுருகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறிவிட்டார். அதேசமயம் நான் திருடன் என்றால் நீங்கள் எல்லாம் யார் என்று இந்தச் சமூகத்தை பார்த்து கேள்வி கேட்கும்படி இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக படத்தில் ராஜுமுருகனின் டச் அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கார்த்தியின் நம்பிக்கை: படம் குறித்து கார்த்தி பேசியபோதுகூட, இந்த படத்தின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் இந்தப் படத்தில் கார்த்தி வெளியே தெரியாமல் நடிப்பதற்கு ரொம்பவே சிரமப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் படம் கார்த்திக்கு 25ஆவது படம் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
நாளை ரிலீஸ்: படமானது நாளை திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. தமிழ்நாடு அரசும் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிவிட்டது. ஆனால் முதல் காட்சி 9 மணிக்குத்தான் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. இதன் காரணமாக நாளையிலிருந்து நவம்பர் 15ஆம் தேதிவரை ஜப்பான் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடப்படுகிறது.
மேக்கிங் வீடியோ: இந்நிலையில் ஜப்பான் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. மேக்கிங் வீடியோவில் கார்த்தியும் படக்குழுவினரும் இந்தப் படத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது.குறிப்பாக மேக்கிங் வீடியோவில் ஒரு ஃப்ரேமில் புரட்சியாளர் சேகுவேராவின் படமும் இடம்பெற்றிருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் சமூக அக்கறையுள்ள படமாக இருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











