போடு வெடிய.. CM விஜய் மகன் கொடுத்த மாஸ் அப்டேட்.. ஜூனியர் தளபதியை கொண்டாட ரெடியா பசங்களா?
சென்னை: நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநராக தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், ஜூலை 31-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாகும் என்பதையும் மீண்டும் உறுதி செய்துள்ளது. இதனால் ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் முயற்சி மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஃபரியா அப்துல்லா நடித்துள்ளார். மேலும் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், சிவ் பண்டிட், யோகி ஜப்பி, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், படத்தொகுப்பு பணிகளை பிரவீன் கே.எல். கவனித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சிக்மா படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. வழக்கமான ஆக்ஷன் திரைப்படமாக இல்லாமல், ஹீஸ்ட், அதிரடி, சஸ்பென்ஸ் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் இணைந்த கதைக்களத்துடன் படம் உருவாகியிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனால், ஜேசன் சஞ்சய் இயக்குநராக என்ன மாதிரியான மேக்கிங்கை கையாண்டிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

புகைப்படங்கள்: தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில், டப்பிங் ஸ்டுடியோவில் சந்தீப் கிஷன் வசனங்களுக்கு உயிர் கொடுக்கும் காட்சிகளும், இயக்குநர் ஜேசன் சஞ்சய் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் கலந்துரையாடும் தருணங்களும் இடம்பெற்றுள்ளன. டப்பிங் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினருடன் சந்தீப் கிஷன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக, ஸ்டுடியோவுக்குள் மிகவும் உற்சாகமாக அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
டப்பிங் ஓவர்: அதோடு, "And Dubbing Wrapped for #Sigma... July 31st Release" என்ற வாசகத்துடன் இந்த அப்டேட்டை படக்குழு பகிர்ந்துள்ளது. இதன் மூலம், டப்பிங் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பின்னணி இசை, சவுண்ட் மிக்சிங், டிஐ (DI), விஎஃப்எக்ஸ், சென்சார் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகராக அறிமுகமாகாமல், கேமராவுக்கு பின்னால் இருந்து இயக்குநராக தனது பயணத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவை எடுத்த ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதால், சிக்மா ஆரம்பம் முதலே அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. பெரிய தயாரிப்பு நிறுவனம், அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு, முன்னணி நடிகர்கள் என வலுவான கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம், ஜேசன் சஞ்சயின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வம்: படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், "டிரெய்லர் எப்போது?", "ஜேசன் சஞ்சயின் மேக்கிங் எப்படி இருக்கும்?", "சந்தீப் கிஷனுக்கு இந்த படம் மிகப்பெரிய கம்பேக் கொடுக்குமா?" என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஜூலை 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள சிக்மா, ஜேசன் சஞ்சயின் முதல் இயக்குநர் முயற்சிக்கு ரசிகர்கள் எந்த மாதிரியான வரவேற்பை அளிக்கப் போகிறார்கள் என்பதே தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications