Jawan: கார்த்தியின் சர்தார் தான் ஜவான்... ஷாருக்கானுக்கு சைலண்ட்டாக விபூதி அடித்த அட்லீ!
சென்னை: ஷாருக்கான் - இயக்குநர் அட்லீ காம்போவில் உருவாகியுள்ள ஜவான் வரும் 7ம் தேதி ரிலீஸாகிறது.
ஜவான் இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து, இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
ஜவான் ட்ரெய்லருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தாலும், படத்தின் கதை குறித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அதாவது ஜவான் கதையும் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான கார்த்தியின் சர்தார் படமும் ஒரேமாதிரி இருப்பதாக ட்ரோல் தொடங்கிவிட்டது.

கார்த்தியின் சர்தார் தான் ஷாருக்கானின் ஜவான்: பதான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது. 2023 ஜனவரியில் பதான் திரைப்படம் மூலம் மாஸ் காட்டிய ஷாருக்கான், இப்போது ஜவானாக களமிறங்கவுள்ளார். இந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீ இயக்கியுள்ள ஜவான், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
அட்லீ இயக்கிய முதல் இந்தி படமாக ஜவான் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கியுள்ள அட்லீ, தற்போது ஜவான் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதிக்கிறார். ராஜா ராணி முதல் பிகில் வரை அட்லீ இயக்கிய படங்கள் அனைத்துமே கதை சர்ச்சையில் சிக்கியுள்ளன. பழைய படங்களின் கதையை லேசாக பட்டி டிங்கரிங் செய்து சூப்பர் ஹிட் கொடுப்பதில் கெட்டிக்காரர்.
இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்தின் கதையும் காப்பி பேஸ்ட் ரகம் தான் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியாகியிருந்தன. அதாவது 1990களில் ஹிட் அடித்த விஜயகாந்த் படத்தின் கதையாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், நேற்று வெளியான ஜவான் ட்ரெய்லரை பார்க்கும் போது, இது கார்த்தியின் சர்தார் பட கதையாக இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் கடந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. அப்பா, மகன் என கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. நாட்டுக்காக உயிரையே கொடுக்க நினைக்கும் உளவாளியான கார்த்தி, தேசத்துரோகி என முத்திரை குத்தப்படுவார். அப்பாவின் மீதான கலங்கத்தை துடைக்க போலீஸ் அதிகாரியான மகன் கார்த்தி போராடுவார். இறுதியாக இருவரும் வில்லனை எப்படி பழிவாங்குகிறார்கள் என்பது தான் கதை.
சர்தார் படத்தின் இதே கதை போல தான், ஷாருக்கானின் ஜவானும் உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஜவான் ட்ரெய்லரில் அப்பா ஷாருக்கான் ராணுவத்தில் ஜவானாக இருப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அவர் மீது தேசத்துரோகி முத்திரை விழ, அதற்காக பழிவாங்கும் படலத்தைத் தொடங்குகிறார் மகன் ஷாருக்கான். ஆகமொத்தம் இந்த இரண்டுமே ஒரே கதை தான் அட்லீயை கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











