Jawan - ஜவான் ஆடியோ உரிமம் எவ்வளவு தெரியுமா?.. ஹிந்தியிலும் மாஸ் காட்டும் அனிருத்
சென்னை: Jawan (ஜவான்) ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜவான் படத்தின் ஆடியோ உரிமம் பெரும் தொகைக்கு வியாபாரம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.
குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்தாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

விஜய்யுடன் பயணம்: அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது. மெர்சல் படம் வசூலில் சாதனை படைத்தது.
ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளுவதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்தது. அதன்படி தற்போது அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
படம் எப்போது ரிலீஸ்: இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். இந்தப் படமும் சில தமிழ் படங்களின் காப்பிதான் என இப்போதே பேச்சு எழுந்திருக்கிறது. ஆனாலும் கடந்த மாதம் சில காட்சிகள் இணையத்தில் லீக்காகின. அதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம அட்லீயா இது. நிச்சயம் படம் மெகா ஹிட்டாகும் என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
படத்தின் வியாபாரம்: இந்நிலையில் ஜவான் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதன்படி படத்தின அடியோ உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம் சுமார் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆடியோ உரிமமே 30 கோடி ரூபாய்க்கு மேல் போயிருப்பதால் இன்னும் டிஜிட்டல் உரிமம், சாட்டிலைட் உரிமத்தை எல்லாம் சேர்த்தால் படத்தின் பட்ஜெட்டை ரிலீஸுக்கு முன்னதாகவே வசூலித்துவிடும் என கணிக்கப்படுகிறது.
அட்லீயின் அடுத்த ஹிந்தி படம்: இதற்கிடையே அட்லீ மும்பையில் 38 கோடி ரூபாய்க்கு சொகுசு ஃப்ளாட் வாங்கியிருப்பதாக கூறப்பட்டது. அதற்கு காரணமாக இனி ஹிந்தியில் அட்லீ கவனம் செலுத்தவிருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில் ஜவான் படத்தை முடித்துவிட்டு தெறி படத்தை அட்லீ ஹிந்தியில் ரீமேக் செய்யப்போகிறார் என்றும் வருண் தவான் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











