"ஆடிய ஆட்டம் என்ன..?” பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜவான்... ஆயிரம் கோடி என்னாச்சு..?
சென்னை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்திற்கு முதல் வாரம் சிறப்பான ஓபனிங் கிடைத்தது.
அதுமட்டும் இல்லாமல் முதல் நான்கு நாட்களும் 100 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது.
இந்நிலையில், வார இறுதிக்குப் பின்னர் ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஆட்டம் கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸில் தடுமாறும் ஜவான்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜவான் திரைப்படம், கடந்த வாரம் 7ம் தேதி வெளியானது. ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இதுவரை தமிழில் மாஸ் காட்டி வந்த அட்லீ, முதன்முறையாக பாலிவுட் சென்றதோடு, ஷாருக்கானுடன் இணைந்து சம்பவம் செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஜவான் உருவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அட்லீயை போலவே ராக்ஸ்டார் அனிருத்துக்கும் ஜவான் தான் பாலிவுட்டின் முதல் படமாக அமைந்துள்ளது. பக்கா கமர்சியல் ஜானரில் ஆக்ஷன் ட்ரீட்டாக உருவாகியுள்ள ஜவான், ஷாருக்கான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பல படங்களில் இருந்து கதை, காட்சிகளை உருவிய அட்லீ, மேக்கிங்கில் பாஸ் ஆகிவிட்டார் என்றே சொல்லலாம்.
ஆரம்பம் முதலே நல்ல ஓபனிங் கிடைத்த ஜவான், முதல் நாளில் 130 கோடி ரூபாய் வசூலித்தது. அதேபோல், இரண்டாவது நாளில் 110 கோடியும், மூன்றாவது நாளில் 144 கோடி, நான்காவது நாளில் 136 கோடி ரூபாய் வசூலித்தது. இதன் மூலம் நான்கே நாட்களில் 500 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்த ஜவான், மொத்தம் 520 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை 120 கோடி ரூபாய் வரை வசூலித்தது ஜவான்.
ஆனால், வார இறுதிக்குப் பின்னர் ஜவான் வசூல், படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. நாளொன்றுக்கு 100 கோடி வசூலித்த ஜவான், ஆறாவது நாளான நேற்று 40 முதல் 50 கோடி ரூபாய் வரை மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாம். நேற்று அபிஸியலாக வெளியான அறிவிப்பின் படி, 574 கோடி ரூபாய் வசூலித்திருந்தது ஜவான். அதன் தொடர்ச்சியாக ஜவான் படத்தின் முதல் 6 நாள் வசூல் 600 கோடியை கடந்துள்ளது.
பதான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கானின் ஜவானும் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது வாரத்தின் தொடக்கமே டல்லடிக்க தொடங்கியதால், ஜவான் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையுமா என்பது சந்தேகமே. இதனால், ஜவான் படத்தை அக்டோபர் 5ம் தேதி ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











