Jawan Prevue - ஜவான் பட ப்ரிவ்யூ.. செம அப்டேட் கொடுத்த படக்குழு.. ரசிகர்கள் உற்சாகம்
மும்பை: Jawan Prevue (ஜவான் ப்ரிவ்யூ) ஜவான் படத்தின் முன்னோட்ட வீடியோ குறித்த அப்டேட்டை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
குறும்படம் எடுத்து அதன் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இணைந்தார் அட்லீ. நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக இருந்த அவர் ஷங்கரின் ஆஸ்தான சீடர்களில் ஒருவர். அதனையடுத்து ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோரை வைத்து ராஜா ராணி படத்தை இயக்கினார். முதல் படமே மெகா ஹிட்டானது. படம் மௌனராகம் போல் இருந்ததாக கூறப்பட்டாலும் அட்லீயின் மேக்கிங் பரவலாக பேசப்பட்டது.

மெர்சல் செய்த அட்லீ: அதனைத் தொடர்ந்து தெறி படத்தை இயக்கினார். இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் பணியாற்றினார். படம் சூப்பர் ஹிட்டானாலும் சத்ரியன் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்காக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். இதில் பிகில் படம் தோல்வியை சந்தித்தது. மெர்சல் படம் வசூலில் சாதனை படைத்தது.
ஹிந்தியில் அட்லீ: படங்களை அப்பட்டமாக காப்பியடிக்கிறார் அட்லீ என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் இயக்கும் படங்கள் வசூலை அள்ளுவதால் அவருக்கான டிமாண்ட் அதிகரித்தது. அதன்படி தற்போது அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் பணிகள் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
படம் எப்போது ரிலீஸ்: இந்தச் சூழலில் படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். கடந்த மாதம் சில காட்சிகள் இணையத்தில் லீக்காகின. அதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம அட்லீயா இது. நிச்சயம் படம் மெகா ஹிட்டாகும். ஒரு கமர்ஷியல் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என பாலிவுட்டுக்கு பாடம் எடுப்பார் அட்லீ என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.
ஜவான் ப்ரிவ்யூ: இந்நிலையில் ஜவான் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி படத்தின் ப்ரிவ்யூ நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர். இதனை ஷாருக்கான், அட்லீ, அனிருத் ஆகியோர் தங்களது ட்விட்டரில் பகிர்ந்திருக்கின்றனர். இந்த ப்ரிவ்யூதான் ஜவான் படத்தின் ட்ரெய்லராக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே நாளை அதனை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் அதுகுறித்த ஹேஷ்டேக்கையும் சமூல் வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
படத்தின் வியாபாரம்: முன்னதாக ஜவான் படத்தின் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதன்படி படத்தின அடியோ உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம் சுமார் 36 கோடி ரூபாய்க்கு பெற்றிருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமை 250 கோடி ரூபாய்க்கு விற்றிருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











