Jawan: ஷாருக்கானின் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது... பாலிவுட்டிலும் இறங்கி அடித்த அனிருத்!
மும்பை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள ஜவான், செப்டம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது அனிருத் இசையில் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
வெளியானது ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள்: பாலிவுட்டில் பாய்காட் பிரச்சினை அதிகமாக காணப்படும் நிலையில், அதையெல்லாம் தவிடுபொடியாக்கி மாஸ் காட்டினார் ஷாருக்கான். கடந்த ஜனவரியில் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிகளுக்கும் மேல் வசூலித்து தெறிக்கவிட்டது. இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
அட்லீ இயக்கியுள்ள இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாகிறது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியா மணி உள்ளிட்ட பலர் ஜவானில் நடித்துள்ளனர். மேலும், கோலிவுட் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜூலை 10ம் தேதி ஜவான் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

கிட்டத்தட்ட ட்ரெய்லர் போலவே உருவாகியிருந்த இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ, ஜவான் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் தாறுமாறாக இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு திரும்பிப் பார்க்க வைத்தார் அட்லீ. ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, அட்லீ, அனிருத் என மிரட்டலான காம்போவில் ஜவான் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகிறது.
ஜவான் க்ளிம்ப்ஸ் வெளியாகி 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளையும் கடந்து சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அதிரடியாக ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் 'வந்த இடம்' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடலின் வரிகளை விவேக் எழுத, அனிருத் பாடியுள்ளார்.

தெலுங்கிலும் அனிருத் குரலில் தான் ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஷாருக்கானின் ஓபனிங் சாங் போல உருவாகியுள்ள 'வந்த இடம்' பாடலை பிரம்மாண்டமாக எடுத்துள்ளார் அட்லீ. ஷாருக்கானின் டான்ஸ், கலர்ஃபுல்லான மேக்கிங், அனிருத்தின் இசை என அனைத்துமே ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளது. அதேபோல், ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிளில் ஷாருக்கானின் மிக இளமையான தோற்றமும் வைரலாகி வருகிறது.
கோலிவுட் ஸ்டைலில் பாலிவுட்டிலும் இறங்கி அடித்துள்ளார் அனிருத். இதனையடுத்து ஜவான் முதல் பாடலை ஷாருக்கான், அனிருத் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











