twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பதவிக்கு வந்த பின் முதல் சினிமா நிகழ்ச்சி: பிலிம்சேம்பர் கட்டிடத்தை திறந்து வைத்தார் ஜெயலலிதா!

    By Shankar
    |

    Jayalalitha
    சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் நூற்றாண்டு விழா கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.

    பிலிம்சேம்பர் அமைப்புக்கு அண்ணா சாலையில் சினிமா நூற்றாண்டு மாளிகை என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்து பட்டனை அழுத்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் சினிமா நூற்றாண்டு மாளிகையை திறந்து வைத்தார்.

    புதிதாக கட்டப்பட உள்ள இன்னொரு மாளிகைக்கு அடிக்கல்லும் நாட்டினார். முன்னதாக ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண், செயலாளர்கள் ரவிகொட்டாரக்கரா, எல். சுரேஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா, "தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையால் கட்டப்பட்டுள்ள சினிமா நூற்றாண்டு மாளிகையை, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா தொடங்கும் வேளையில் திறந்து வைப்பதிலும், மற்றொரு சினிமா நூற்றாண்டு மாளிகைக்கு அடிக்கல் நாட்டுவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    நம்மை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவால் இந்த வர்த்தக சபையின் சொந்தக் கட்டடம் 15.6.1968 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இந்த வர்த்தக சபையின் திரையரங்குகளில் திரையிடப்பட்ட திரைப்படங்களை பார்த்து, அங்கே நடைபெற்ற விழாக்களில் பல்வேறு காலக்கட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

    நானும் இச்சபையில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று இருக்கின்றேன். குறிப்பாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வுகளை நான் இன்றும் நினைத்து பெருமை கொள்கின்றேன்.

    இந்த சபை திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் மற்றும் இத்துறையைச் சார்ந்த அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும் பாடுபட்டு வரும் ஒரு சிறந்த அமைப்பாகும். இந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பல நூற்றாண்டுகளை கடந்து திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    இங்கே எனக்கு முன்னால் பேசிய அன்பர், இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட புதிய நூற்றாண்டு விழா மாளிகை கட்டப்பட்ட பின்னர், அதையும் நானே திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் புதிய மாளிகை கட்டி முடிக்கப்பட்டதும், நானே நேரில் வந்து திறந்து வைக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்றைய தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன். புதிய கட்டடத்தை திறந்து வைக்க நானே நேரில் வருகிறேன் என்பதை தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்," என்றார்.

    புதிய கட்டிடத்தை ஜெயலலிதா திறந்து வைத்தபோது கட்டிட வளாகத்தில் திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு நின்று திரையில் பார்த்து கைதட்டினர்.

    தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர், நிர்வாகிகள் கலைப்புலி தாணு, பிஎல் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தயாரிப்பாளர் இரண்டாக உடைந்த பிறகு, எஸ் ஏ சந்திரசேகரன் அணியினரும், இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான அதிருப்தி அணியினரும் ஒரு சேர கலந்து கொண்ட நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chief Minister Jayalalithaa inaugurated the film chamber centenary building today by video conferencing.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X