முன்னாள் முதல்வர் ஜெ.தான் ரியல் குயின்.. அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் பரபரப்பு தகவல்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் ரியல் குயின் என்று நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், அஞ்சனா ஜெயபிரகாஷ், வம்சி கிருஷ்ணா உட்பட பலர் நடித்த வெப்சீரிஸ், குயின்.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான இந்த தொடரை கவுதம் வாசுதேவ் மேனனும் கிடாரி பிரசாந்தும் இயக்கி இருந்தனர்.

ரம்யா கிருஷ்ணன்
அனிதா சிவகுமாரன் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் உருவான இந்த வெப் தொடர், 11 எபிசோட் வெளியான நிலையில் முதல் பகுதி முடிவடைந்து விட்டது. விரைவில் அடுத்த பகுதி வரும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த பாகம் பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவரது கதை அல்ல
ஜெயலலிதாதான் உண்மையான குயின் என்று தெரிவித்துள்ள அவர், இது ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை அல்ல என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'நீங்கள் அப்படி நினைத்துக்கொள்ளலாம். இயக்குனரும் என்னிடம் இதைதான் சொன்னார். ஆனால், இது அவரது வாழ்க்கை கதை அல்ல. இது அனிதா சிவகுமாரன் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதை.

துணிச்சல் பிடிக்கும்
ஜெயலலிதாவின் கதை போலவே இதுவும் இருப்பதால் எனக்குப் பிடித்திருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல் எனக்குப் பிடிக்கும். அவர்தான் ரியல் குயின். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் என்ன சொன்னாரோ அதை இந்த தொடருக்காக செய்தேன். என்னை போலவே, அவர் இயல்பாக நடிக்கும்படி சொன்னார்.

ரசித்து நடித்தேன்
அதை நான் செய்தேன். படத்துக்கான வசனங்கள் வலிமையாக இருந்தன. அவை சிறப்பாக எழுதப்பட்டிருந்தன. ரசித்துப் பேசி நடித்தேன். குறிப்பாக அந்தத் தொடரில் வந்த கேள்வி பதில் பகுதி அருமையாக எழுதப்பட்டிருந்தன. குயின் 2 தொடரின் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

பரபரப்பாக இருக்கும்
லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புத் தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என்று சரியாக தெரியவில்லை. குயின் 2 இன்னும் விறுவிறுப்பாக, பரபரப்பாக இருக்கும். சுவாரஸ்யமான விஷயங்களை இதில் எதிர்பார்க்கலாம். முதல் பாகம், ஜீடிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











