ஜெயம் ரவி விவாகரத்து வழக்கு.. மனம் விட்டு பேசுங்கள்.. நீதிபதி அறிவுரை!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தியை மனம் விட்டு பேசும்படி சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுரை கூறி உள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிய ஜெயம் ரவி, 2009ம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற பட தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதையடுத்து, ஜெயம் ரவி, தனது எக்ஸ் தள பக்கத்தில் மனைவியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இந்த விவாகரத்து முடிவை ஜெயம் ரவி என் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக எடுத்தார். இந்த விவாரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்து பேச அனுமதி கேட்டும் இதுநாள் வரை அனுமதி கிடைக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
விவாகரத்து வழக்கு: இதைத்தொடர்ந்து, விவாகரத்து வழக்கு,கடந்த மாதம் சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்த நிலையில்,.ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதீபதி, குடும்ப நல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் இன்றைய தினமே சந்தித்து பேச வேண்டும் என்றும், அதுகுறித்த விவரத்தை உடனே தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டு இருந்தார்.
மனம் விட்டு பேசுங்கள்: ஜெயம் ரவி தொடர்ந்த விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். சமரச பேச்சுவார்த்தை முடிவடையவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின் இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


Click it and Unblock the Notifications











