ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்குப் பின்.. நித்யா மேனன் பெயருக்குப் பின்னால் ஜெயம் ரவி பெயர்..காரணம்?
சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில், நித்யா மேனன், ஜெயம் ரவி, வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. முதலில் இந்தப் படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஜனவரி 14இல் பொங்கல் விடுமுறையில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் படக்குழுவினர், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். கடந்த தீபாவளிக்கு ஜெயம் ரவியின் பிரதர் படம் ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. மாறாக, படம் படு தோல்வியைச் சந்தித்தது. அதேபோல், அந்த தோல்வியில் இருந்து மீள, பொங்கலுக்கு காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் மக்களைச் சந்திக்கின்றார். இந்தப் படம் குறித்து படக்குழுவினர் தரப்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள, பாடல்கள், டீசர், ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படியான நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அதாவது, ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது, படத்தின் போஸ்டரில், ஜெயம் ரவியின் பெயருக்கு முன்னால், நித்யா மேனனின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது படத்தின் போஸ்டர் ரிலீஸில் இருந்து இது வரை வெளியான அனைத்திலும், நித்யா மேனனின் பெயர்தான் முதலில் உள்ளது.
பெரிய விஷயம்: இப்படியான நிலையில், இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நித்யா மேனன், “ இது பெரிய விஷயம். மேலும் ஒரு நல்ல விஷயம். சினிமாவில் என்னதான் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியம் இருந்தாலும் நடிகைகள் பெயர்களை முதலில் போடுவது குறித்து யாரும் யோசிப்பதில்லை. நான் இதற்கு முன்னரும் பெண் இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ளேன். ஆனால், இப்போதுதான் இது நடைபெற்றுள்ளது. ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் இருக்கும் சினிமா உலகிலும் ஆணாதிக்கம் உள்ளது. இந்த விஷயத்தைச் சொன்னதும், ஜெயம் ரவி ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். என்னை பலரும் எப்போது ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றுவீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனால், இந்தப் படத்தின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது” என பேசினார்.
ஜெயம் ரவி: அதேபோல், ஜெயம் ரவி பேசுகையில், “ நான் முதன் முதலாக ஒரு பெண் இயக்குநருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். இதுவரை எனக்கு இருந்த பார்வையை அவர் மாற்றிவிட்டார். எப்போதும் ஒரு ஆணின் பார்வையில் இருந்தே, அனைத்தையும் அணுகிப் பழகிய எனக்கு பெண்ணின் பார்வை குறித்து கிருத்திகா உதயநிதி சொல்லிக் கொடுத்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் சாருடன் மீண்டும் இணைந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி. அவருடன் ஒரு படத்திலாவது பணியாற்றவேண்டும் என இருந்தேன். ஆனால், அவருடன் நான் இப்போது நான்கு படங்களில் பணியாற்றிவிட்டேன்.
காரணம்: எனது பெயருக்கு முன்னால், நித்யா மேனன் பெயர் வந்ததற்கு காரணம், நான் முதன் முதலாக ஒரு பெண் இயக்குநருடன் இணைந்து பணியாற்றுகின்றேன் என்பதுதான் காரணம். மேலும் அவர்கள் மீது எனக்கு உள்ள மரியாதையும் ஒரு காரணம்” எனக் கூறினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











