Jayam Ravi அந்த பெண்ணுடன் தொடர்பா?.. ஆர்த்திக்கு முன்பே தெரியும்.. டைவர்ஸ் பற்றி ஜெயம் ரவி ஓபன்
சென்னை: ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தியோ ரவி எடுத்த முடிவு தனக்கு தெரியாது என்று விளக்கம் அளித்தார். இதனையடுத்து ஜெயம் ரவி - ஆர்த்தி டாபிக் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. இடையில் ஜெயம் ரவி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என பலர் கூறினார்கள். இந்தச் சூழலில் விவாகரத்து தொடர்பாக ஜெயம் ரவி முதன்முறையாக விளக்கமளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கிசுகிசுவில் சிக்காத நடிகர்களில் ஜெயம் ரவியும் ஒருவர். தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையையும் கவனமாக கையாளும் ரவி கடைசியாக சைரன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது அவரது கைகளில் ஜீனி, பிரதர், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக இந்த மூன்று படங்களுமே ஹிட்டடிக்கும் என்ற பெருத்த நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயம் ரவி.

மனைவியை பிரிந்த ரவி: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் ரவி வெளியிட்டிருந்த அறிக்கையில், 'எனது மனைவி ஆர்த்தியை பிரிகிறேன். திருமண வாழ்க்கையிலிருந்து விலகுகிறேன்' என்று கூறியிருந்தார். மேலும் விவாகரத்து மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது. மேலும் ஜெயம் ரவிக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால்தான் விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாக பலரும் பேசினார்கள். இருந்தாலும் ஜெயம் ரவி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
ரவி விளக்கம்: அவர் நடித்திருக்கும் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்கவிருக்கும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கமளித்த அவர், "கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து முடிவில்தான் இருந்தேன். எனக்கு இது தனிப்பட்ட முறையில் வேதனைதான். விவாகரத்து பற்றி இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன். அதற்கு பிறகு அவரது அப்பாவும் என்னிடம் பேசினார்.
மகன்கள் நிலைமை: எனது மூத்த மகனிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன். அவனுக்கு எப்படி புரியுமோ அப்படி சொல்லியிருக்கிறேன். அனைத்து குழந்தைகள் போன்று நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் சொன்னான். இரண்டு மகன்களும் என்னுடன் இருக்கிறார்கள். எனது பெற்றோர் என்னுடைய முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மகிழ்ச்சிதான் முக்கியம். இத்தனை வருடம் சினிமா வாழ்க்கையில் எந்த கிசுகிசுவிலும் வராமல் இருந்தவன் நான்.
இன்னொரு பெண்ணுடன் தொடர்பா?: என்னை இன்னொரு பெண்ணுடன் இணைத்து பேசுவது தவறானது. அந்தப் பெண் ஆதரவற்ற பெண். அவர் பலருக்கு உதவிகளை செய்துவருகிறார். அவரும் நானும் சேர்ந்து ஆன்மீக மையம் ஒன்றை அமைக்கவிருந்தோம். இன்னொரு பெண்ணை என் விவாகரத்து விவகாரத்தில் தொடர்புப்படுத்தி பேசுவது தேவையற்ற ஒன்று. இதுதொடர்பாக அதிகம் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். உண்மை ஒருநாள் நீதிமன்றம் மூலம் வெளியே வரும்" என்றார்.
ஆர்த்தி விளக்கம்: முன்னதாக ஆர்த்தி அளித்திருந்த விளக்கத்தில், 'ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன்.
வாய்ப்பு மறுக்கப்பட்டது: என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல..
அனுமதிக்க முடியாது: ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது.'என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
மதிப்பளியுங்கள்: மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


Click it and Unblock the Notifications











