ரிலீஸாக முடியாமல் திணறும் அகிலன்... சைலண்ட் மோடில் ஜெயம் ரவி... என்னதான் நடக்குது..?
சென்னை: கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் வெளியாகவிருந்தது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதமே ரிலீஸாக வேண்டிய அகிலன் 2023 பிப்ரவரியில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜராஜ சோழன் ஜெயம் ரவி
ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவிக்கு, அடுத்தடுத்து எம் குமரன், சம்திங் சம்திங், பேராண்மை போன்ற படங்கள் அவரது கேரியரின் பெஸ்ட்டாக அமைந்தது. முக்கியமாக தனி ஒருவன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து ஜெயம் ரவியை டாப் ஹீரோக்களில் ஒருவராக அடையாளப்படுத்தியது. மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் கடந்தாண்டு வெளியானது. அதில் ராஜராஜ சோழனாக நடித்து கோலிவுட்டையே அசர வைத்தார்.

அடுத்தடுத்து கிடைத்த பட வாய்ப்புகள்
கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வரும் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் தரமான கம்பேக் படமாக அமைந்தது. இதனிடையே அகிலன், இறைவன் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இதில் அகிலன் திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டது. ஜெயம் ரவியின் பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் தான் அகிலன் படத்தையும் இயக்கியுள்ளார். ஜெயம் ரவியுடன் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அகிலன் ரிலீஸாவதில் சிக்கல்
பூலோகம் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயம் ரவி - கல்யாண் கிருஷ்ணன் கூட்டணியில் உருவாகியுள்ள அகிலன் படத்துக்கு ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஹார்பரில் நடக்கும் கேங்ஸ்டர் கதைக்களத்தின் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், அகிலன் திரைப்படம் கடந்தாண்டு செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு இந்தாண்டு பிப்ரவரியில் வெளியாகும் என ரிலீஸ் தேதியை ஒத்திவைத்தது படக்குழு.

புதிய ரிலீஸ் தேதி என்ன..?
இதனையடுத்து அகிலன் படத்தை இம்மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு ரெடியாகிவந்த நிலையில், தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலில் தான் படமாக்கப்பட்டுள்ளன. இதனால் சில தடையில்லா சான்றிதழ்கள் வாங்கினால் தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியுமாம். இதனையடுத்து தற்போது அதற்கான வேலைகளில் பிஸியாகியுள்ள படக்குழு, அகிலன் படத்தை மார்ச் மாதம் வெளியிட முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











