இது ஜெயிலர் சீசன் போல - அடுத்ததாக களமிறங்கும் ஜெயம் ரவி.. வெளியான புதிய தகவல்
சென்னை: ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தில் அவர் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான ஜெயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை ரவியின் அண்ணனான ராஜா இயக்கியிருந்தார். அதன் பிறகு ஜெயம் ரவி நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட்டடித்தன.

நடிகர் ஜெயம் ரவியின் தெளிவான பார்வை
ஜெயம் ரவியின் கேரியரில் பல வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவரது படங்களில் பல படங்கள் முக்கியமானதாக இருந்தாலும் பேராண்மை படம் அவைகளில் தனித்து தெரியும் ஒன்று. கம்யூனிஸ சித்தாந்தவாதியான ஜனநாதன் இயக்கத்தில் உருவான அந்தப் படம்தான் ரவியை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தியது. அதன் பிறகு அவர் ஆக்ஷன் படங்களிலும் தனது கவனத்தை செலுத்தினார்.

மெகா ஹிட்டான தனி ஒருவன்
ஜெயம் ரவியை வைத்து ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிவந்த ராஜா முதல்முறையாக ரவிக்கென்று சொந்தமாக கதை எழுதி தனி ஒருவன் படத்தை இயக்கினார். ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்த அந்தப் படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆனது. ஜெயம் ரவியுடன் நயன்தாரா உள்ளிட்டோரும் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். தனி ஒருவன் படத்திலிருந்து ஜெயம் ரவியின் கிராஃப் மட்டுமின்றி ஜெயம் ராஜாவின் கிராஃப்பும் உச்சம் சென்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றனர்..

பொன்னியின் செல்வனில் கலக்கிய ரவி
இந்தச் சூழலில் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்காத வாய்ப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. பொன்னியின் செல்வனில் ரவி, அருண்மொழி சோழனாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரத்திற்கு ரவி செட் ஆவாரா என்று கேள்வி கேட்டவர்கள் அனைவரும் படத்தில் ரவியின் நடிப்பை பார்த்து வாயடைத்துப்போயினர். இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற அகிலன்
ஜெயம் ரவி சமீபத்தில் அகிலன் படத்தில் நடித்திருந்தார்.எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநரும், பூலோகம் படத்தின் இயக்குநருமான கல்யாண் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். துறைமுகத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாகியிருந்ததால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது அகிலன் படம். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

சைரனில் ஜெயிலராக ஜெயம் ரவி
இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்ததாக சைரன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை அந்தோணி பாக்கியராஜ் இயக்குகிறார். ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சைரன் படத்தில், கீர்த்தி சுரேஷ் காவல் துறை அதிகாரியாகவும், ஜெயம் ரவி ஜெயிலராகவும் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினியும் ஜெயிலர் கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











