இளமையில் தனிமை.. விட்டு சென்ற தாய்.. கனகா சொன்ன அந்த வார்த்தை.. ஜெயந்தி கண்ணப்பன் ஷேரிங்ஸ்
சென்னை: நடிகை கனகா 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து டாப் இடத்தில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென காணாமல் போனார் கனகா. அதனையடுத்து அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. இதனையடுத்து நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனையடுத்து மீண்டும் கனகா குறித்து ரசிகர்கள் அதிகம் பேச ஆரம்பித்தனர். இந்தச் சூழலில் ஜெயந்தி கண்ணப்பன் கனகா பற்றி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பெரிய விருப்பம் எதுவும் இல்லாமல்தான் கனகா நடிப்பதற்கு தேவிகா ஒத்துக்கொண்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதன் காரணமாக கனகா தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.

பிஸியான கனகா: தமிழில் முதல் படம் ஹிட்டான பிறகு ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார் கனகா. அதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் புக் ஆனார். இதன் காரணமாக நிற்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தார் அவர். சூழல் இப்படி இருக்க திடீரென அவர் காணாமல் போனார். ஒருகட்டத்தில் கனகா உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதுகூட ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.
தனிமைப்படுத்திய கனகா: அவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். யாரையும் சந்திப்பதில்லை, வெளியே வருவதில்லை என்று ஏகப்பட்ட விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதற்கு காரணம் தேவிகாவின் மரணம் ஒன்று என்றும் இன்னொரு காரணம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வி என்றும் பேசப்பட்டது. இருந்தாலும் கனகா பத்திரிகையாளர்களையோ சினிமாக்காரர்களையோ சந்திக்கவே இல்லை.
ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி: இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன் கனகா குறித்து தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எந்த நடிகையை பற்றியும் கண்ணதாசன் கட்டுரை எழுதியது இல்லை. தேவிகாவை பற்றி மட்டும்தான் கட்டுரை எழுதியிருக்கிறார். எப்போதுமே சிவாஜி கணேசனுக்கு ஏற்ற ஜோடி என்றால் அது தேவிகா மட்டும்தான் என்று பலர் கூற கேட்டிருக்கிறேன்.
கோயில்: கனகா என்ற புகழ்பெற்ற கோயில் ஒன்று இருக்கிறது. அந்தப் பெயரைத்தான் தனது மகளுக்கும் வைத்தார் தேவிகா. காலப்போக்கில் தேவிகாவுக்கும், கனகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள். கனகாவின் வாழ்க்கையில் நடந்த சோகம் என்னவென்றால் அவளுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து அப்பாவும், அம்மாவும் கனகாவுடன் இல்லை. அதனால் கனகா பெரும்பாலான நேரங்களில் தனிமையாகவே இருந்தார். அண்ணனோ, தங்கையோ இருந்திருந்தால்கூட இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்.
நிலைகுலைய செய்தது: முக்கியமாக தேவிகாவின் இறப்பு கனகாவை நிலைகுலைய செய்தது. தேவிகா இறந்த பிறகு கனகா சொன்னது எனக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது. அதாவது, தேவிகாவை கொண்டு செல்லும்போது அவரைப் பார்த்து கனகா, 'என்னை இப்படி தனியாக விட்டு போகிறாயே இனி எனக்கு யார் இருக்கிறார்' என்று கூறினார். அந்த வார்த்தை இன்னும் எனது காதில் விழுந்துகொண்டே இருக்கிறது.
இளமையில் தனிமை: பொதுவாக இளமையில் தனிமை மிகவும் கொடுமை. கனகா தனது இளமைக்காலம் முழுவதும் தனியாகவே இருந்தார். அவளுக்கு பெரிதாக யார் மீதும் நம்பிக்கை இல்லை. அதன் பிறகு அவளும் தன்னை அப்படியே தனிமைப்படுத்திக்கொண்டார். கிட்டத்தட்ட தனித்தீவாகவே ஆகிவிட்டாள். ஒருகட்டத்தில் அவளை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று நினைத்து அவளது வீட்டுக்கு சென்றோம். அப்போது ஜன்னல், கதவுகள் எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து, உனக்கு நாங்கள் இருக்கிறோம் என்று பேப்பரில் எழுதி எங்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம் என்று சொல்லி ஃபோன் நம்பரை எழுதி வைத்துவிட்டு வந்தோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











