மனோஜ் உயிரிழப்பு.. அன்று என்ன நடந்தது?.. மகன் எங்கே என்கிறார் பாரதிராஜா..சோகத்துடன் பகிர்ந்த சகோதரர்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜாவின் குடும்பத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது இறுதி சடங்கு பெசன்ட் நகர் மின் மாயனத்தில் நடந்தது. இரண்டு மகள்களும் அந்த காரியங்களை செய்தார்கள். இந்தச் சூழலில் பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜ் மனோஜ் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காலங்கடந்தும் பேசப்படும் படைப்புகளை தந்திருக்கக்கூடியவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என்றும், டைரக்டர் என்றும் அனைவராலும் அன்போடும், உரிமையோடும் அழைக்கப்படுபவர் அவர். திரைத்துறையில் ஏராளமான ஆளுமைகள் உருவாவதற்கு முதல் காரணமாக இருந்தவரும் அவர்தான். அவர் அறிமுகப்படுத்தி இன்று இந்திய அளவில் திறமையை நிரூபித்து சாதித்து காட்டிய நடிகர்கள், நடிகைகள் ஏராளமானோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனின் அறிமுகம்: அப்படி தனது மகன் மனோஜையும் தாஜ் மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. கண்டிப்பாக தன்னுடைய மற்ற அறிமுகங்கள் போல் தனது மகனும் திரைத்துறையில் ஜொலிப்பார் என்றே கணக்கு போட்டிருந்தார் அவர். ஆனால் மனோஜால் அப்படி ஜொலிக்க முடியவில்லை. முதல் படமே படுதோல்வியை சந்தித்தது. அடுத்தடுத்து அவர் நடித்த படங்களும் சரியாக போகவில்லை. இதன் காரணமாக மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார்கள் தந்தையும், மகனும்.
திரைத்துறையில் நீடித்த மனோஜ்: நடிகராக தன்னால் வெல்ல முடியாவிட்டாலும் இயக்குநராக வென்றுவிட வேண்டுமென்பதில் தீர்மானமாக இருந்தார் மனோஜ். மேலும் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார். சூழல் இப்படி இருக்க புதுமுகங்கள் மற்றும் பாரதிராஜாவை வைத்து மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இதற்கிடையே மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்திருந்தார் அவர்.
இதய ஆபரேஷன்: கேரக்டர் ரோலை அவர் ஏற்க ஆரம்பித்திருந்தாலும் எப்படியாவது இயக்குநராக வென்றுவிட வேண்டும் என நினைத்ததால் தொடர்ந்து கதைகளை எழுதிவந்தார். அடுத்தும் ஒரு படம் இயக்குவதாக இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு சமீபத்தில் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வைத்து இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டில் ஓய்வெடுத்துவந்தார்.
உயிரிழந்த மனோஜ்: முழுவதுமாக குணமடைந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் நினைத்திருந்த சமயத்தில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்தது. அதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜாவுக்கு பெரிய இடியாக இறங்கியது. பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் வைத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இந்நிலையில் மனோஜ் குறித்து பாரதிராஜாவின் சகோதரரான ஜெயராஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
ஜெயராஜின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "மனோஜ் எல்லோருடனும் ஜோவியலாகத்தான் பழகுவார். என் மீது மிகுந்த பாசம். அவருக்கு சமீபத்தில்தான் சென்னையில் இருக்கும் சிம்ஸ் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தோம். அதற்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருந்தார். அவர் இறந்த அன்று மதியம்கூட தந்தை பாரதிராஜாவிடம் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். அன்று மாலை பப்பாளி சாப்பிட்டார். அந்த சமயத்தில்தான் எனக்கு என்னமோ பண்ணுது என்று சொல்லியபடி உயிரை விட்டார். மனோஜ் உயிரிழந்துவிட்டார் என்பதை பாரதிராஜாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனது புகைப்படத்தை பார்த்து மனோஜ் எங்கே என்று கேட்டபடி இருக்கிறார். அவரை பொறுத்தவரை மனோஜ் உயிரோடு இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











