அனுஷ்காவின் ‘ருத்ரமாதேவி’ படப்பிடிப்பில் 1.5 கிலோ தங்க, கவரிங் நகைகள் திருட்டு - 3 பேர் கைது
ஹைதராபாத்: நடிகை அனுஷ்கா ராணியாக நடித்து வரும் 'ராணி ருத்ரமாதேவி' படப்பிடிப்புத் தளத்தில் சுமார் 1.5 கி அளவுள்ள தங்கம் மற்றும் கவரிங் நகைகள் திருட்டுப் போயுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணி ருத்ரமாதேவி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மன்னர் காலத்து கதையான இப்படத்தில் அனுஷ்கா, ராணா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
காக்தியா மன்னர் பற்றிய படம் இது என்பதால் இதில் நடிக்கும் நடிகர்கள் அதிக அளவு நகைகளை அணிந்து நடித்து வருகின்றனர். இதற்காக சென்னையில் இருந்து பல லட்ச ரூபாய் செலவில் கவரிங் நகைகள், வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நகைகள் ரவி சுப்பிரமணியம் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைத்திருக்கும் படி வலியுறுத்தப்பட்டிருந்தது.

பழங்கால தங்க நகைகள்...
இந்நிலையில், நாயகி அனுஷ்கா அணிந்து நடிப்பதற்காக என பிரத்யேகமாக பெங்களூரில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள பழங்கால தங்க நகைகள் வரவழைக்கப்பட்டிருந்தது.

மதிய உணவு...
அனுஷ்கா படப்பிடிப்பு மதியம்தான் நடைபெற இருந்ததால் அந்த நகையும் ரவி சுப்பிரமணியின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு இருந்தது. மதிய உணவின்போது நகைப் பெட்டியை மேக்கப் வேன் டிரைவர் இருக்கை பின்புறம் வைத்து விட்டு ரவி சுப்பிரமணியம் சாப்பிட சென்றார்.

நகைகள் மாயம்...
15 நிமிடங்கள் கழித்து ரவி சுப்ரமணியம் திரும்பி வந்து பார்த்தபோது நகைப்பெட்டி திறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. அதில் இருந்த அனைத்து நகைகளும் மாயமாகி இருந்தது.

ரூ. 45 லட்சம் மதிப்பு...
நகைகளை யாரோ திருடிச் சென்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப் படுகிறது. ஏனெனில் அதன் மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும்.

எச்சரிக்கை...
சம்பவம் நடைபெற்ற போது படப்பிடிப்பு குழுவில் 150 பேர் இருந்துள்ளனர். ‘‘நகையை யார் எடுத்தாலும் திருப்பி தந்து விடுங்கள். போலீசுக்கு புகார் செய்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என எச்சரித்து நிர்வாக தயாரிப்பாளர் ராம்கோபால் படப்பிடிப்பு குழுவினரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் யாரும் நகையை எடுத்ததை ஒப்புக் கொள்ளவில்லை.

புகார்...
இதையடுத்து ராயதுர்கா போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

கைது...
மேலும், சந்தேகத்தின் பேரில் ரவி சுப்பிரமணியம், மேக்கப் வேன் டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், திருட்டு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











