வீட்டில் மயங்கி விழுந்து.. இளம் இயக்குனர் மாரடைப்பால் திடீர் மரணம்.. திரையுலகம் கடும் அதிர்ச்சி!
கொச்சி: பிரபல இளம் இயக்குனர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
லாக்டவுனுக்கு முன்பாக, கடந்த மார்ச் மாதம் மலையாளத்தில் வெளியான படம், கோழிபோரு (Kozhipporu).
இந்தப் படத்தை ஜிபித் ஜார்ஜ், ஜினோய் ஜனார்தனன் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்கி இருந்தனர்.

கொரோனா லாக்டவுன்
இதில், நடிப்பு பயிற்சியாளர் நவஜித் நாராயணன், இந்திரன், பாபி வல்சன், அஞ்சலி நாயர், வீணா நந்தகுமார், சமிக்ஷா நாயர் உட்பட பலர் நடித்திருந்தனர். பிஜிபால் இசை அமைத்திருந்த இந்த படத்துக்கு ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படம் தியேட்டரில் இருந்து மற்றப் படங்களைப் போல எடுக்கப்பட்டது.

மயங்கி விழுந்தார்
லாக்டவுனுக்குப் பிறகு இதை மறுவெளியீடு செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. இதுபற்றி நவஜித் நாராயணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ஜிபித் ஜார்ஜ் திடீரென மரணமடைந்துள்ளார். கொச்சியில் வசித்து வந்த ஜிபித்துக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

மாரடைப்பால்
பின்னர் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 30. இளம் இயக்குனர் ஒருவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்திருப்பது மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ரசிகர்கள்
அவரது மறைவுக்கு மலையாளத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து சிலர் உயிரிழந்து வருவது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











