Black Trailer: ஜீவா, பிரியா பவானி சங்கரின் மிரள வைக்கும் பிளாக் டிரெய்லர் ரிலீஸ்.. அடுத்த பேய் படமா?
சென்னை: ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள 'பிளாக்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது. ஹாலிவுட் தரத்தில் ஒரு அட்டகாசமான ஹாரர் படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க நடிகர் ஜீவா ரெடியாகி விட்டார். கே.ஜி. பாலசுப்ரமணி என்பவர் எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஆசை ஆசையாய், தித்திக்குதே படங்களின் மூலம் தயாரிப்பாளர் ஆர்பி செளத்ரியின் மகனான ஜீவா கடந்த 2003ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். ராம், டிஷ்யூம், ஈ, பொறி, கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், கோ உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் அங்கீகாரத்தையும் கொடுத்தன.

அதன் பின்னர் அவர் தேர்வு செய்து நடித்த பல படங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில், கம்பேக் கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு பிளாக் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் விபத்து: சமீபத்தில் குடும்பத்துடன் நடிகர் ஜீவா கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னச்சேலம் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென பைக் ஒன்று குறுக்கே வந்த நிலையில், அதில் மோதிவிடக் கூடாது என நினைத்த ஜீவா காரை திருப்ப அது சென்டர் மீடியனில் பட்டு உரசியதில் விபத்தில் சிக்கியது. ஜீவா உள்ளிட்ட மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. 40 வயதாகும் நடிகர் ஜீவா தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் படம் பெரிதாக கை கொடுக்காத நிலையில், தெலுங்கில் யாத்ரா 2 படத்திலும் நடித்திருந்தார்.
பிளாக் டிரெய்லர்: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியிலும் பேய் படங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழில் அரண்மனை 4, டிமான்ட்டி காலனி 2, மலையாளத்தில் பிரமயுகம், இந்தியில் சைத்தான், மூஞ்சியா மற்றும் ஸ்ட்ரீ 2 உள்ளிட்ட ஹாரர் படங்கள் ஹிட் அடித்தன. இந்நிலையில், அந்த வரிசையில் ஜீவாவுக்கு இந்த பிளாக் எனும் ஹாரர் படம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அட்டகாசமான டிரெய்லர் தற்போது வெளியானது.
பிரியா பவானி சங்கர் தான் ஜோடி: டிமான்ட்டி காலனி 2 வெற்றியைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள பிளாக் படமும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியாக ஒரு வில்லாவுக்கு குடி புகும் தம்பதியினர் சந்திக்கும் எதிர்பாராத அமானுஷ்யங்கள் தான் படத்தின் கதையாக உள்ளது.
முதல் சஸ்பெக்ட்டே கணவர் தான்: திருமணமாகி ஒரு பெண் காணாமல் போனாலோ, மரணித்தாலோ அந்த வழக்கில் முதல் சஸ்பெக்ட்டே அவருடைய கணவர் தான் என கடைசியில் வரும் காட்சியை பார்த்தால் பிரியா பவானி சங்கருக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்வியை எழுப்புகிறது. பேய் படமா அல்லது ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமா? என்கிற குழப்பத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். அதிகபட்சமாக டிசம்பர் மாதம் தியேட்டருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம் சி.எஸ். பின்னணி இசை பயத்தைக் கூட்டுகிறது.


Click it and Unblock the Notifications











