Black Box Office Day 2: ஜீவாவின் பிளாக் படத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவு.. பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மழை
சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மொத்தம் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆனது. ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வேட்டையன். இந்தப் படம் கடந்த 10ஆம் தேதியே ரிலீஸ் ஆகிவிட்டது. இதையடுத்து நடிகர் ஜீவா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பிளாக்.
இந்தப் படம் நேற்று முன் தினம் அதாவது அக்டோபர் 11ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் திகில் நிறைந்த காட்சிகளால் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு ஆதரவு கூடிக்கொண்டே போவதால் வசூலும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

ராம், சிவா மனசுல சக்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜீவா. நடிகர் மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்த சூப்பர் குட் ஃபிலிம்ஸின் உரிமையாளரான ஆ.பி. சௌத்ரியின் மகன் நடிகர் ஜீவா. நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். ராம், கற்றது தமிழ், ஈ போன்ற மிகவும் ராவான சப்ஜெக்ட் படங்களில் நடித்து, தனது நடிப்பில் அசத்தி தமிழ் சினிமாவில் பர்ஃபாமிங் ஆர்ட்டிஸ்ட் என்ற அந்தஸ்தை தனது சினிமா வாழ்க்கை தொடங்கும்போதே பெற்றவர்.

அதன் பின்னர் சிவா மனசுல சக்தி, டிஷ்யூம், தெனாவட்டு போன்ற கம்ர்ஷியல் படங்களிலும் நடித்து மார்கெட் உள்ள நடிகராக தன்னை உயர்த்திக் கொண்டார். இவர் நடித்த படங்களில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் எனக் கூறலாம். குறிப்பாக கோ, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்கள் என்றைக்கும் எவர் க்ரீன் படங்களாகவே உள்ளது. சமீபகாலமாக கொஞ்சம் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படம் ப்ளாக்.

ரீ-மேக்: இப்படம், கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட்டில் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீ-மேக். படத்தில் சில காட்சிகளை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தினை இயக்குநர் கே ஜி பாலசுப்பிரமணி இயக்கி உள்ளார். மேலும், இந்த படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக வளர்ந்து வரும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதேபோல் இவர்களுடன் விவேக் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் என பலர் நடித்துள்ளனர். திகிலூட்டும் காட்சிகள் அதிகம் இருந்தாலே இயக்குநர்களின் முதல் தேர்வாக இப்போதெல்லாம் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இருக்கின்றார். அவர்தான் இந்தப் படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

ப்ரியா பவானி சங்கர்: மேலும் படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். தொடர்ந்து பல தோல்விப் படங்களில் அங்கம் வகித்த நடிகை பிரியா பவானி சங்கருக்கு டிமான்ட்டி காலனி 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படமும் வெற்றி பெறும் என ஆவலுடன் படக்குழு காத்துக் கொண்டு உள்ளது. குறிப்பாக படத்தின் வசூல் தியேட்டரில் படக்குழு எதிர்பார்த்ததை விடவும் அதிகம் வசூலிக்கும் என படக்குழு நம்புகின்றது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு வேறு படங்கள் ரிலீஸ் ஆகாது என்பதால் ப்ளாக் படத்தின் வசூல் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
வசூல்: ஏற்கனவே படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், படத்தின் தியேட்டர்கள் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கலாம் என பேச்சுகள் அடிபடுகின்றது. படம் முதல் நாளில் ரூபாய் 65 லட்சம் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட ரூபாய் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படம் முதல் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட இரண்டு கோடிகள் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இன்று வார இறுதி என்பதால் இன்றும் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனவும் வரும் காலங்களிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











