எல்லோரையும் திருப்திப்படுத்துற மாதிரி தமிழ்ல படம் எடுக்கிறது கஷ்டம்: நடிகர் ஜீவா பேச்சு
சென்னை: அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தமிழ்ப்படம் எடுப்பது கடினம் என்று நடிகர் ஜீவா தெரிவித்தார்.
டேக் ஓ.கே கிரியேஷன்ஸ் வழங்கும் படம் மிரட்சி. ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடித்துள்ள இந்தப்படத்தை எம்.வி.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. விழாவில், தயாரிப்பாளர் ராஜன், நாயகி ஹீனா ஸஹா, இசை அமைப்பாளர் ஆனந்த், இயக்குநர் கிருஷ்ணா, ஜித்தன் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஷாருக்கானுக்கு
இதில் நடிகர் ஜீவா பேசும்போது, 'இங்கு யாரும் தோல்விப் படம் கொடுக்க நினைப்பதில்லை. எல்லாரும் உண்மையாகத்தான் உழைக்கிறார்கள். எல்லோரின் திறமையும் ஒருநாள் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படும். 'டர்' என்ற இந்தி படம் நடிகர் ஷாருக்கானுக்கு அமைந்த மாதிரி, இதில் நடித்துள்ள ரமேஷுக்கு இந்தப்படம் அமையும் என்று நம்புகிறேன்.

ஆன்டி ஹீரோ
நான் ராம் படத்தில் நடிக்கும்போது வில்லனா, ஆன்டி ஹீரோவா என்று தெரியாமல் இருந்தேன். அப்போது படத்தின் ஆர்ட் டைரக்டரிடம், ஆன்டி ஹீரோ பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆன்டி என்றால் அத்தை தானே? என்று கேட்டார். அப்போது ஆடியன்ஸ் அவ்வளவு வெகுளியாக இருந்தார்கள். இப்போது தெளிவாக இருக்கிறார்கள்.

திருப்திப்படுத்தும் படி
ஆங்கிலப்படத்தைக் கூட எல்லாரையும் திருப்திப்படுத்தும்படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விதவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அவ்வளவு எளிதாக திருப்திப்படுத்த முடியாது. ஆனால் மிரட்சி படம் அதைச் செய்யும் என்று நம்புகிறேன்' என்றார்.

ஹீரோவாகத்தான்
படத்தில் வில்லனாக நடித்துள்ள ஜித்தன் ரமேஷ் பேசும்போது, 'இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கத்தான் என்னைக் கேட்டார்கள். நான் தான் வில்லன் கேரக்டரைக் கேட்டு வாங்கினேன். ஏன் என்றால் அந்தக் கேரக்டர் எனக்கு பிடித்திருந்தது. தயாரிப்பாளர் ராஜன் சார் இப்படத்தை பெரிய படமாக மாற்றி விட்டார்' என்றார்


Click it and Unblock the Notifications











